பாடாலூர் அருகே ஏரியில் சாலை அமைப்பதை கண்டித்து பொதுமக்கள் மறியல்
பாடாலூர் அருகே புதுக்குறிச்சி ஏரியில் சாலை அமைப்பதை கண்டித்து அந்தப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடாலூர்,
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் அருகே உள்ள காரை கிராமத்தில் ஊராட்சி செயலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய நிலங்கள், கிணறுகள் காரை ஊராட்சி புதுக்குறிச்சியில் ஊரக வளர்ச்சித் துறைக்கு சொந்தமான ஏரிக்கு அருகே உள்ளது. அந்த நிலத்திற்கு செல்வதற்காக புதுக்குறிச்சி ஏரியினுள் சந்திரசேகர் சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்றி விட்டு, சாலை அமைத்து வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஏரியில் சாலை அமைப்பதை கண்டித்து புதுக்குறிச்சி கிராமத்தை பொது மக்கள் நேற்று காலை காரை பஸ் நிறுத்தம் அருகே ஆலத்தூர் கேட்டில் இருந்து அரியலூர் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தயாளன், வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் சிரில்சுதன், பாடாலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாறன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏரியில் ஆக்கிரமித்து சாலை அமைப்பதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story