திட்டங்களை போராடி பெறவேண்டிய நிலையில் உள்ளோம் நாராயணசாமி வேதனை
புதுவையில் மக்களுக்கான திட்டங்களை போராடி பெற வேண்டிய நிலையில் உள்ளோம் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி வேதனையோடு கூறினார்.
புதுச்சேரி,
புதுவை அரசின் மகளிர் மேம்பாட்டுத்துறை சார்பில் நெல்லித்தோப்பு தொகுதியை சேர்ந்த 295 பேருக்கு முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை புதிதாக வழங்கப்பட உள்ளது. இதன் தொடக்கவிழா கீர்த்தி மகாலில் நேற்று நடந்தது.
விழாவுக்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு பயனாளிகளுக்கான ஓய்வூதிய அட்டை மற்றும் உதவித்தொகையை வழங்கினார்.
விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–
புதுவையில் திட்டங்களை போராடி பெறவேண்டிய நிலையில் அரசு உள்ளது. முதியோர் பென்சனைக்கூட 2 ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக இப்போதுதான் வழங்குகிறோம். அதை நெல்லித்தோப்பு தொகுதியில் தொடங்கி உள்ளோம்.
கவர்னர் மாளிகை முன்பு இரவு பகலாக போராடியதன் விளைவாகத்தான் இதுவும் கிடைத்தது. இன்னும் இலவச அரிசி, சென்டாக் கல்விநிதி, மாற்று திறனாளிகளுக்கு நிதி என பல திட்டங்கள் நிலுவையில் உள்ளது. இன்னும் 2 மாதம் மட்டும் பொறுத்திருங்கள்.
இந்த நிலைமை விரைவில் மாறும். போராட்டத்திற்கு பிரதிபலனாக மக்கள் எங்களுக்கு கை கொடுக்கவேண்டும்.
இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
அமைச்சர் கந்தசாமி பேசும்போது, கவர்னர் மாளிகை முன்பு திறந்தவெளியில் பனியில் படுத்து உறங்கி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற செய்தவர் முதல்–அமைச்சர் நாராயணசாமி, அவரது உழைப்பு மற்றும் திறமைக்கு கிடைத்த பரிசைத்தான் மக்கள் தற்போது பெறுகிறார்கள் என்றும், நடிகர் திலகம் சிவாஜிகணேசனைப்போன்று பிரதமர் நடித்துக்கொண்டிருக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.
விழாவில் புதுவை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் யஷ்வந்தையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.