உரிமம் பெறாமல் விதைகளை விற்றால் நடவடிக்கை - அதிகாரி எச்சரிக்கை
அரியலூர் மாவட்டத்தில் உரிமம் பெறாமல் விதைகளை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சி விதை ஆய்வு துணை இயக்குனர் கண்ணன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம், எள், நெல், பயறுவகை பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது. இவற்றை பயிரிட வேளாண்மைத்துறை மட்டும் இன்றி தனியார் துறை விதை உற்பத்தியாளர்களும் விதை உற்பத்தி செய்து விதைகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த விற்பனையை ஒழுங்குமுறைபடுத்த கோவை விதை சான்றளிப்பு மற்றும் அங்ககச்சான்றுத்துறையினர் தனியார் ரகம் மற்றும் வீரிய ரகங்களை இந்த துறையில் பதிவு செய்து, பதிவு எண் பெற்ற பிறகே நாளை (வெள்ளிக்கிழமை) முதல் விற்பனை செய்ய வேண்டும் என தெரிவித் துள்ளது. இதன் அடிப்படையில் அரியலூர் மாவட்டத்தில் விதை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படும் தனியார் ரகங்கள் மற்றும் வீரியரகங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்பட்டு பதிவு எண் உள்ள ரகங்கள் மட்டுமே நாளை முதல் விற்பனை செய்யப்படவேண்டும். மேலும் பதிவு செய்யப்படாத ரகங்களை விற்பனையாளர்கள் இருப்பு வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அவர்கள் மீது விதைகள் சட்டம் மற்றும் விதைகள் கட்டுப்பாட்டு ஆணை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் உரிமம் பெறாமல் விதைகளை விற்பனை செய்தால், அதன் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விதை பைகளில் உள்ள விவர அட்டையில் அட்டை எண், குவியல் எண், பயிர், ரகம், காலாவதி நாள் உட்பட 14 விவரங்கள் இருக்கவேண்டும். விவசாயிகள் விதைகள் வாங்கும் போது விதை விற்பனை பட்டியல் (ரசீது) கேட்டு வாங்கவேண்டும், ரசீதில் பயிர், ரகம், குவியல் எண் மற்றும் காலாவதி நாள் உள்ளதா? என சரி பார்த்து வாங்கவேண்டும். மேலும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விதை விற்பனையாளர்களும் தங்களிடம் உள்ள விதை இருப்பு மற்றும் தாங்கள் விற்பனை செய்த விதை விவரங்களை பயிர் மற்றும் ரகம் வரியாக வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் விதை செயலியில் பதிவேற்றம் செயவேண்டும்.
அரசு உரிமம் இன்றி விதை விற்பனையில் ஈடுபடுபவர்கள் குறித்து பொது மக்கள் திருச்சி மன்னார்புரத்தில் இயங்கி வரும் விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். புதிய விதை வினியோக உரிமம் பெற விரும்புவோர் விண்ணப்பபடிவம் அ-வை பூர்த்தி செய்து அதனுடன் சொந்த இடம் எனில் வரி செலுத்திய ரசீது அல்லது வாடகை இடம் எனில் மூன்று ஆண்டுகளுக்கான ஒப்பந்த பத்திரம், ஆதார் அட்டையின் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு, கடையின் வரைபடம் மற்றும் ரூ.ஆயிரம் செலுத்திய கருவூல ரசீது ஆகிய ஆவணங்களுடம் திருச்சி மன்னார்புரத்தில் இயங்கிவரும் விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story