கரூரில் 554 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்
கரூரில் 554 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.
கரூர்,
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, 554 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.88 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழக அரசு நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு இணையாக சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகளும் மதிக்கப்படவேண்டுமென்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், கடந்த காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் போது 9 வகையான பாதிப்புகளுக்கு மட்டுமே நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.் இப்போது 21 வகையான மாற்றுத்திறன் கொண்ட நபர்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் குறித்து அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும். மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பட்டுவளர்ச்சித்துறையின் சார்பாக 2018-ம் ஆண்டிற்கான சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்க பரிசு தொகைக்கான காசோலையை 3 பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி,கூட்டுறவு சங்கப்பிரதிநிதிகள் காளியப்பன், நெடுஞ்செழியன், செல்வராஜ், ஜெயராஜ், மார்க்கண்டேயன், சிவசாமி, மல்லிகா, ரேணுகா, அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்கியதில் 40 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தநிலையில் இந்திய ராணுவம், பாகிஸ்தானில் குண்டுவீசி தாக்கி 350-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்று குவித்தது. இந்த வெற்றி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாகும். மேலும் இந்திய ராணுவம், பாகிஸ்தான் எந்த பதிலடி கொடுத்தாலும் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் பலமாக உள்ளது, என்றார்.
Related Tags :
Next Story