நாடாளுமன்ற தேர்தலில், கர்நாடக மக்கள் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியை ஆதரித்தால் தேசிய அரசியலில் மாற்றம் ஏற்படும் தேவேகவுடா கணிப்பு


நாடாளுமன்ற தேர்தலில், கர்நாடக மக்கள் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியை ஆதரித்தால் தேசிய அரசியலில் மாற்றம் ஏற்படும் தேவேகவுடா கணிப்பு
x
தினத்தந்தி 28 Feb 2019 4:15 AM IST (Updated: 28 Feb 2019 3:02 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியை கர்நாடக மக்கள் ஆதரித்தால் தேசிய அரசியலில் மாற்றம் ஏற்படும் என்று தேவேகவுடா கூறினார்.

ஹாசன், 

ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு சட்டமன்ற தொகுதியில் நேற்று முன்தினம் ரூ.1,563 கோடியில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளுக்கான தொடக்க விழா நடந்தது.

அரக்கல்கோடு ராமநாதபுராவில் நடந்த இதற்கான விழாவில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, அடிக்கல் நாட்டி, கல்வெட்டுகளை திறந்து வளர்ச்சித்திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. இது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது இந்த கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் தொடர்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கும் பொறுப்பை கட்சி தலைவர்களிடம் ஒப்படைத்துள்ளோம்.

கூட்டணி ஆட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை. அதேபோல் கூட்டணிக்குள்ளும் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி தலைவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. இரு கட்சி தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து ஆலோசித்து ஒரே முடிவை அறிவிப்பார்கள். தொகுதி பங்கீட்டிலோ, வேட்பாளர்கள் தேர்விலோ நான் தலையிடப்போவதில்லை.

பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் சம்பவம் பாராட்டுக்குரியது. நமது நாட்டின் பாதுகாப்பு மிக முக்கியம். பந்திப்பூர் வனப்பகுதியில் காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு ராணுவ ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி தீயை அணைத்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல மூத்த அதிகாரிகளும், வனத்துறையினரும் பந்திப்பூரிலேயே முகாமிட்டுள்ளனர்.

எனது தலைமையிலான மாநில அரசு விவசாயக்கடன் தள்ளுபடி குறித்து அறிவித்தபோது பிரதமர் மோடி கிண்டல் செய்தார். ஆனால் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை மோடி தொடங்கி உள்ளார். எப்படியாவது மீண்டும் அவர் பிரதமர் ஆகிவிட வேண்டும் என்று எண்ணுகிறார். அவரது கனவு பலிக்காது.

இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி பேசினார்.

முன்னதாக விழாவில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா பேசும்போது கூறியதாவது:-

ஹாசன் உள்பட 9 மாவட்டங்களில் தென்னை விவசாயம் அதிகமாக உள்ளது. ஆனால் தற்போது சரியான மழை இல்லாமல் மரங்கள் நாசமாகி வருகின்றன. இதுதொடர்பாக நான் 4 முறை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினேன். ஆனால் அவர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகளைப் பற்றி அவருக்கு அக்கறை இல்லை. ஆனால் தற்போது விவசாயிகளின் நலனில் அக்கறை உள்ளதுபோல் அவர் நாடகமாடுகிறார்.

மாநிலத்தில் தற்போது நடந்து வரும் கூட்டணி ஆட்சி நன்றாக நடைபெற்று வருகிறது. மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதனால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியை கர்நாடக மக்கள் ஆதரிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தேசிய அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படும்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

Next Story