திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு: டெண்டர் விண்ணப்பங்கள் இருந்த பெட்டிக்கு தீவைப்பு மர்ம கும்பல் அத்துமீறல்
திருச்சி மாநகராட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி புகுந்து டெண்டர் விண்ணப்பங்கள் இருந்த பெட்டியை மர்ம கும்பல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி,
திருச்சி மாநகராட்சியில் பொன்மலை, கோ.அபிஷேகபுரம், அரியமங்கலம், ஸ்ரீரங்கம் ஆகிய 4 கோட்டங்கள் உள்ளன. இந்த 4 கோட்டங்களுக்குட்பட்ட வார்டுகளில் தார்சாலை, சிமெண்டு சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ரூ.10 கோடி மதிப்பில் மேற்கொள்ள விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் முறைப்படி டெண்டர் மூலம் விண்ணப்பிக்கலாம் என கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக மாநகராட்சி மைய அலுவலகத்தின் முதல்தளத்தில் இயங்கி வரும் பொறியாளர்பிரிவு அலுவலகத்தில் டெண்டர் விண்ணப்பங்களை போடுவதற்கு பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. அந்த பெட்டியில் பல்வேறு நிறுவனத்தினர் தங்களது டெண்டர் விண்ணப்ப மனுக்களை போட்டு வந்தனர். நேற்று மாலை 4 மணி அளவில் பெட்டி திறக்கப்பட்டு அதில் இருக்கும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட குறைவான தொகைக்கு டெண்டர் கோரியவர்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று மாலை டெண்டர் பெட்டியை திறந்து மனுக்களை பரிசீலனை செய்வதற்கான ஆயத்த பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.இந்த நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள பொறியாளர் பிரிவு அலுவலகத்துக்குள் திடீரென 3 பேர் கொண்ட கும்பல் புகுந்தது. அவர்கள் அங்கிருந்த டெண்டர் பெட்டி மீது பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். இதில் தீ மள,மளவென எரிய தொடங்கியது. உடனே அவர்கள் அங்கிருந்து வேகமாக சென்று விட்டனர். இதனை கண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது அங்கு டெண்டர் விண்ணப்பத்தை போட காத்திருந்த சில ஒப்பந்ததாரர்கள் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஓடி சென்று பெட்டியில் இருந்த டெண்டர் விண்ணப்பங்கள் எரிந்துவிடாதபடி தீயை அணைத்தனர். மேலும், இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டனர். தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் அங்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் சிலர் டெண்டர் களை பிரிக்கக் கோரி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர் இதையடுத்து டெண்டர் கோரி மனு அளித்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே அங்கு இருக்க வேண்டும் என்றும், மற்றவர்கள் வெளியே செல்லுங்கள் என்று கூறி போலீசார் அப்புறப்படுத்தினர். இதையடுத்து மாலை 4 மணி அளவில் டெண்டர் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. உரிய பரிசீலனைக்கு பிறகு யாருக்கு டெண்டர் ஒதுக்கப்படும் என்பது தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். திருச்சி மாநகராட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி புகுந்து டெண்டர் பெட்டிக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து நகர பொறியாளர் அமுதவள்ளி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாநகராட்சி அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, டெண்டர் பெட்டி மீது பெட்ரோல் ஊற்றி எரித்தது யார்? என விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story