வணிகர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் பிரபாகர் அறிவுரை
அனைத்து வணிகர்களும் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் பிரபாகர் கூறினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட வழிகாட்டுதல் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கி பேசியதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு வணிகம் செய்யும் உணவு வணிகர்களும், உணவு பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவு சான்றிதழ் பெற வேண்டும் என்பது உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் 2006-ன் படி கட்டாயமாகும்.
உணவு வணிகம் செய்யும் வணிகரின் ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சத்திற்கு மேல் இருந்தால் உரிமம் பெற வேண்டும். ரூ. 12 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் பதிவு சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும். உணவு பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவு சான்றிதழ் பெறுவதற்கு பொது சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு வணிகர்களும் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டாக்டர் வெங்கடேசன், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் ரமேஷ், இணைப்பதிவாளர் (பால் வளம்) ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story