அந்தநல்லூரியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
அந்தநல்லூரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஜீயபுரம்,
திருச்சியை அடுத்த அந்த நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்பகுதியில் உள்ள ரெயில்வே இருப்புபாதையை தாண்டி அந்தநல்லூர் குடிதெரு, அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த பகுதி மக்கள் அந்தநல்லூர் ரெயில்வே கேட்டை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.
அது மட்டுமல்லாது இந்த பகுதியில் 600 ஏக்கரில் சாகுபடி செய்துள்ள விவசாய விளைபொருட்களை இந்த தண்டவாள பாதையின் வழியாக தான் கொண்டு செல்ல வேண்டும். இந்த நிலையில் நேற்று காலை ரெயில்வே என்ஜினீயரிங் துறையை சேர்ந்தவர்கள் பொக்லைன் எந்திரத்தோடு சுரங்கப்பாதை அமைப்பதற்காக வந்தனர். இதை அறிந்த அப்பகுதி மக்கள் அந்தநல்லூர் ரெயில்வே கேட் அருகில் ஒன்று கூடி சுரங்கப்பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த அந்தநல்லூர் பகுதி வருவாய் அதிகாரி திலகவதி, ஜீயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இது பற்றி அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-
இந்த பாதையை எங்கள் முன்னோர்கள் காலம் தொட்டு பயன்படுத்தி வருகிறோம். இந்த ரெயில்வே கேட்டை தாண்டி தான் விவசாய பொருட்கள் உள்ளிட்டவைகளை தினமும் கொண்டு சென்று வருகிறோம். இறந்தவரின் உடலையும் இந்த பாதை வழியாக தான் கொண்டு செல்கிறோம். அந்த அளவிற்கு இந்த பாதை மக்களோடு மக்களாக ஒன்றுபட்டுவிட்டது.
ஆனால் தற்போது ரெயில்வே நிர்வாகத்தினர் நாங்கள் பயன்படுத்தி கொண்டிருக்கும் பாதையின் அருகில் வயல்வெளி பகுதியில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் மேற்கு நோக்கி இருப்பு பாதையின் அடியில் சுரங்கப்பாதை அமைக்க உள்ளனர். ரெயில்வே நிர்வாகத்தினர் சுரங்கப்பாதை அமைக்க உள்ள இடத்தில் மழை காலத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கி நிற்கும். தண்ணீர் தேங்கினால் பொதுமக்கள் செல்ல மிகுந்த சிரமமாக இருக்கும். மேலும் புதிதாக அமைக்க உள்ள பாதையின் அருகில் உள்ள நிலங்களில் தண்ணீர் தொடர்ந்து தேங்கி நிற்கும். இதனால் அங்கு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story