தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம்- வாலிபருக்கு தர்ம அடி
கடலூர் உழவர் சந்தை அருகில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு தர்மஅடி விழுந்தது.
கடலூர்,
கடலூர் இம்பீரியல் சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தைக்கு கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள், பெண்கள் தங்களது விளைநிலத்தில் விளையும் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், வாழை இலை போன்ற பல்வேறு பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
அதிகாலையில் இருந்தே உழவர் சந்தை செயல்பட தொடங்கி விடும் என்பதால் தொலைதூரங்களில் உள்ளவர்கள் முந்தைய நாள் இரவே வந்து விடுவார்கள். அவர்கள் உழவர் சந்தை வெளியே படுத்து தூங்கி, மறுநாள் வியாபாரத்தை தொடங்குவது வழக்கம். இதன்படி நேற்று நள்ளிரவில் பெண்கள், விவசாயிகள் உழவர் சந்தைக்கு வெளியே சாலையோர கடைகள் முன்பு படுத்து தூங்கினர்.
அப்போது அங்கு வந்த 35 வயதுமதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் திடுக்கிட்டு எழுந்த அந்த பெண், கூச்சலிட்டார். உடனே அருகில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் எழுந்து, அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். ரோட்டில் நடந்து சென்றவர்களும் அவரை சரமாரியாக தாக்கினர். பெண்கள் சிலர் அருகில் கிடந்த துடைப்பத்தால் தாக்கினர். இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலைய போலீசார் விரைந்து வந்தனர்.
அவர்களிடம், அந்த வாலிபர் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், சேத்தியாத்தோப்பு வளையமாதேவியை சேர்ந்தவர் என்பதும், கடலூர் பஸ் நிலையத்தில் ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story