ராஜபாளையம் அருகே மாணவ, மாணவிகள் மறியலால் பரபரப்பு - 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


ராஜபாளையம் அருகே மாணவ, மாணவிகள் மறியலால் பரபரப்பு - 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 28 Feb 2019 4:08 AM IST (Updated: 28 Feb 2019 4:08 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் அருகே மாணவ, மாணவிகளின் 3 மணி நேர சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலர் இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் கழிப்பறைக்கு சென்ற ஒரு மாணவியை, மற்றொரு தரப்பைச் சேர்ந்த மாணவி தாக்கி உள்ளார். தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் மாணவி தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேர்வு அறையில் சலசலப்பு ஏற்படவே, அங்கு தேர்வு எழுதிக் கொண்டிருந்த தாக்கப்பட்ட மாணவியின் பிரிவைச் சேர்ந்த 4 மாணவிகளை உடனடியாக விடைத்தாள்களை வாங்கிக் கொண்டு ஆசிரியர்கள் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

இது குறித்து அந்த மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து வந்த சேத்தூர் போலீசார் அந்த பெற்றோர்களை சமாதானப்படுத்தினர். இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பெற்றோர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். விசாரணை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.

ஆனால் உறுதி அளித்தபடி இதுவரை எந்த ஒரு விசாரணையும் நடத்தவில்லை என குற்றம்சாட்டி காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று தென்காசி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தென்காசி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த ராஜபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன், தாசில்தார் ராமச்சந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட கல்வி அதிகாரி சின்னத்துரை, ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் ஆகியோர் மறியல் நடைபெற்ற இடத்துக்குச் சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது தங்கள் பகுதி மாணவிகளை தாக்கிய பிற மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.

தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தி அதன் மூலம் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் தங்களது மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 3 மணி நேரம் ராஜபாளையம்-தென்காசி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.


Next Story