வெள்ளினிப்பட்டி மஞ்சுவிரட்டு; 500 காளைகள் சீறிப்பாய்ந்தன - 20 பேர் காயம்


வெள்ளினிப்பட்டி மஞ்சுவிரட்டு; 500 காளைகள் சீறிப்பாய்ந்தன - 20 பேர் காயம்
x
தினத்தந்தி 28 Feb 2019 4:32 AM IST (Updated: 28 Feb 2019 4:32 AM IST)
t-max-icont-min-icon

கொட்டாம்பட்டி அருகே வெள்ளினிப்பட்டியில் நடந்த மஞ்சுவிரட்டில் 500 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் காளைகள் முட்டியதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே உள்ளது, வெள்ளினிப்பட்டி கிராமம். இங்குள்ள சதுரகிரி மலை அடிவாரத்தில் பிரசித்திபெற்ற ஆண்டி கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடத்த கிராம மக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஐந்து நிலை நாடு வெள்ளினிப்பட்டி கிராமத்தின் சார்பில் நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இந்த மஞ்சுவிரட்டில் கலந்துகொள்வதற்காக மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே வரத்தொடங்கின. மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மஞ்சுவிரட்டை காண்பதற்காக ஏராளமானோர் அதிகாலையிலேயே குவிந்தனர்.

முன்னதாக வெள்ளினிப்பட்டியில் இருந்து கிராமத்தினர் ஜவுளி எடுத்து கொண்டு ஊர்வலமாக மேளதாளத்துடன் சதுரகிரி மலை அடிவாரத்தில் உள்ள ஆண்டி கருப்புசாமி கோவிலுக்கு சென்று வழிபட்டனர். பின்னர் சிங்கம்புணரி சேவுகமூர்த்தி அய்யனார் கோவில் காளைகள் முதலில் அவிழ்த்துவிடப்பட்டது. தொடர்ந்து வெள்ளினிப்பட்டி கிராம கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு மஞ்சுவிரட்டு தொடங்கியது. பின்னர் உள்ளூர், வெளியூர்களில் இருந்து அழைத்துவரப்பட்ட 500-க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

அவ்வாறு களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் அடக்க முயன்றனர். இதில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் கட்டில், சேர், பீரோ, சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசு களாக வழங்கப்பட்டன.

இந்த மஞ்சுவிரட்டை பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என பலரும் டிராக்டர், மினி வேன் மற்றும் மலையின் பாறைகள் மீது அமர்ந்து பாதுகாப்பாக கண்டுகளித்தனர். மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கொட்டாம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.



Next Story