மாவட்டத்தில் 3 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது


மாவட்டத்தில் 3 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 27 Feb 2019 11:15 PM GMT (Updated: 27 Feb 2019 11:06 PM GMT)

சேலம் மாவட்டத்தில் 3 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சேலம், 

அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள கூட்டாத்துப்பட்டி நேரு காலனியை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மகன் ஜெகன் (வயது 30). அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் கண்ணன் (31). ரவுடிகளான இவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வந்தனர். இதனால் ஜெகன், கண்ணன் ஆகியோரை காரிப்பட்டி போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதைதத்தொடர்ந்து ஜெகன், கண்ணன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் ஆகியோர் கலெக்டர் ரோகிணிக்கு பரிந்துரை செய்தனர். இதை ஏற்று அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல் சிறையில் உள்ள ஜெகன், கண்ணன் ஆகியோரிடம் போலீசார் வழங்கினர். இவர்கள் 2 பேர் மீதும் கொலை, கொள்ளை, வழிப்பறி என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

சேலம் கருங்கல்வாடி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. ரஜினி ரசிகரான இவர் சில அரசியல் தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவு செய்து வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளப்பட்டியை சேர்ந்த சபரி (30) தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பழனிசாமியை கத்தியால் தாக்கி கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரி உள்பட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ரவுடியான சபரியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், துணை போலீஸ் கமிஷனர் தங்கதுரை ஆகியோர் கமிஷனர் சங்கருக்கு பரிந்துரை செய்தனர். இதை ஏற்று அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல் சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டது. மாநகர, மாவட்டத்தில் மொத்தம் 3 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story