புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி இந்தியாவிலேயே சிறந்ததாக உருவாக்கப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி இந்தியாவிலேயே சிறந்ததாக உருவாக்கப்படும் என்று மருத்துவ கண்காட்சியை தொடங்கி வைத்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ கண்காட்சி நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழக சுகாதாரத்துறையின் சிறப்பான செயல்பாட்டால் இந்திய அளவில் முதன்மை சுகாதாரத்துறையாக திகழ்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளிடையே மருத்துவப்படிப்பினை ஊக்குவிக்கவும், மருத்துவம் தொடர்பான பல்வேறு தகவல்களை தெரிந்துகொள்ளவும் தமிழகத்திலேயே முதல்முறையாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் மாபெரும் மருத்துவக் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடையே படிக்கும் காலத்திலேயே டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவை உருவாக்குவதற்காக இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ கண்காட்சியில் மருத்துவம் சார்ந்த பல்வேறு துறையினரின் செயல் விளக்க அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. உடற்கூறு இயல், உடலின் இயக்க முறைகள், உயிர் வேதியியல், மயக்க மருத்துவ பொருட்கள், நுண்கிருமிகள், சட்டம் சார்ந்த மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை சார்ந்த அறுவை சிகிச்சை பகுதிகள், ஒட்டுறுப்பு, புற்றுநோய் அறுவை சிகிச்சை, ரத்த நாள அறுவை சிகிச்சைத்துறை போன்ற 26 துறைகளின் செயல் விளக்க முறைகள் இடம் பெற்றுள்ளன. இக்கண்காட்சி 10 நாட்கள் நடைபெற உள்ளது. எனவே இக்கண்காட்சியை மாணவர்கள் பார்வையிட்டு எதிர்காலத்தில் சிறந்த மருத்துவராக உருவாக வேண்டும். புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், கோபால்டு தெரபி உள்ளிட்ட பல்வேறு உயர் தர சிகிச்சை பிரிவுகள் அமைக்கப் பட்டுள்ளது.
தமிழகத்திலேயே முதல் முறையாக சிறுநீரகம் தொடர்பான அனைத்து சிகிச்சைகளையும் மேற்கொள்ளும் வகையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் முதற்கட்டமாக ரூ.70 கோடி மதிப்பீட்டில் சிறுநீரக ஒப்புயர்வு சிகிச்சை மையக் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் இந்தியாவிலேயே சிறந்த மருத்துவக் கல்லூரியாக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
இதில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அரசு செயலாளர் டாக்டர்.பீலா ராஜேஷ், மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குனர் கணேஷ், மருத்துவக்கல்வி இயக்குனர் எட்வின்ஜோ, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வனஜா, ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சந்திரசேகரன், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக புதுக்கோட்டை பழைய ராணியார் மருத்துவமனை வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு மேம்படுத்தப்பட்ட தாய்மை நலம் மற்றும் குழந்தைகள் நல மையக் கட்டிடத்தினை அமைச்சர் ஆய்வு செய்தனர்.
இதைதொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ கண்காட்சி இனிவரும் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் நடைபெறும். கடந்த 5 ஆண்டுகளில் ஆயிரம் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை புதிதாக பெறப்பட்டு சேர்க்கை நடைபெற்றுள்ளது. அதே போன்று இந்த ஆண்டும் கூடுதல் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சிலிடம் அனுமதி பெற்று கூடுதல் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். அதேபோன்று இந்த ஆண்டு புதிதாக கரூரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இவ்வாறு கூறினார்.
Related Tags :
Next Story