தலைமை ஆசிரியையை கண்டித்து அரசு பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோர் சாலைமறியல்


தலைமை ஆசிரியையை கண்டித்து அரசு பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோர் சாலைமறியல்
x
தினத்தந்தி 28 Feb 2019 5:10 AM IST (Updated: 28 Feb 2019 5:10 AM IST)
t-max-icont-min-icon

தாழக்குடியில், தலைமை ஆசிரியையை கண்டித்து அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

ஆரல்வாய்மொழி,

நாகர்கோவிலை அடுத்த தாழக்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பார்வதிபுதூர்,சந்தவிளை,தோப்பூர், விளாங்காட்டு காலனி, மீனமங்கலம், மேல ஊர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 373 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு தலைமை ஆசிரியையாக தயாபதி நளதம் பணியாற்றி வருகிறார். இவர் மாணவ-மாணவிகளை தரக்குறைவாக பேசி வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று 10-ம் வகுப்பு மாணவியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அவர் தனது பெற்றோரிடம் கூறினார்.

உடனே அவரது பெற்றோரும், மற்ற மாணவ-மாணவிகளின் பெற்றோரும் நேற்று காலை 10 மணியளவில் பள்ளிக்கூடம் முன் திரண்டனர். பின்னர், அவர்கள் முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜா தலைமையில் பள்ளிக்கூடம் முன் தாழக்குடி-நாகர்கோவில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு பஸ்கள் மற்றும் வாகனங்கள் போக்குவரத்து தடைபட்டது. இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கும், கல்வி அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆரல்வாய்மொழி சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேஷ்வர ராஜ், சங்கர்குமார் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

உடனே மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செந்திவேல் முருகன், நாகர்கோவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, மாணவிகளின் பெற்றோர் தலைமை ஆசிரியையை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று கல்வி அதிகாரியிடம் மனு அளித்தனர்.

உடனே கல்வி அதிகாரி, வரும் கல்வியாண்டில் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் போராட்டம் மதியம் 1 மணிக்கு முடிவுக்கு வந்தது. பின்னர் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலைந்து சென்றனர். 

Next Story