மாவட்டத்தில் 8 ஆண்டுகளில் 95 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள்


மாவட்டத்தில் 8 ஆண்டுகளில் 95 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள்
x
தினத்தந்தி 28 Feb 2019 10:45 PM GMT (Updated: 28 Feb 2019 5:13 PM GMT)

தேனி மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 95 ஆயிரத்து 687 மாணவ, மாணவிகளுக்கு ரூ.32¾ கோடி மதிப்பில் அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி, 

தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவ, மாணவிகளின் கல்வி, ஏழ்மையின் காரணமாக எந்த ஒரு சூழ்நிலையிலும் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக கல்வி ஊக்கத்தொகை, விலையில்லா பாட புத்தகம், நோட்டுபுத்தகம், ஆண்டுக்கு 4 ஜோடி சீருடைகள், காலணிகள், புத்தகப்பை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அத்துடன் மடிக்கணினி, சைக்கிள் போன்றவையும் வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்டம் முழுவதும் நடப்பு கல்வி ஆண்டில் 95 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 703 மாணவ, மாணவிகளுக்கு ரூ.3 கோடியே 97 லட்சத்து 40 ஆயிரத்து 239 மதிப்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு உள்ளன.

கடந்த 2011-2012-ம் நிதியாண்டில் இருந்து நடப்பு நிதியாண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர். அதன்படி, கடந்த 8 ஆண்டுகளில் மூலம் இந்த திட்டத்தின் மூலம் 46 ஆயிரத்து 549 மாணவர்கள், 49 ஆயிரத்து 138 மாணவிகள் என மொத்தம் 95 ஆயிரத்து 687 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த சைக்கிள்கள் மொத்தம் ரூ.32 கோடியே 86 லட்சத்து 15 ஆயிரத்து 953 மதிப்பில் வழங்கப்பட்டு உள்ளது. எனவே, கல்வித்துறைக்காக அரசு வழங்கி வரும் நலத்திட்டங்கள் மூலம் பயன்பெற்ற மாணவ, மாணவிகள் அவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story