புயல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி வேளாண்மை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை சேதுபாவாசத்திரத்தில் பரபரப்பு
புயல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி சேதுபாவாசத்திரத்தில் வேளாண்மை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேதுபாவாசத்திரம்,
கஜா புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் ஏராளமான தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிந்துள்ளது. தமிழக அரசு புயலில் சாய்ந்த தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.1,100 நிவாரண தொகை வழங்கப்படும் என அறிவித்தது. புயல் சேத விவரங்களை முறையாக கணக்கெடுக்காததன் விளைவாக தென்னை விவசாயிகள் பலருக்கு அரசு அறிவித்த நிவாரண தொகை கிடைக்கவில்லை. வங்கி கணக்குகளில் குளறுபடி இருப்பதால் நிவாரணம் சென்று சேரவில்லை என கூறப்பட்டது. இதுதொடர்பாக அதிகாரிகளை, விவசாயிகள் தொடர்பு கொண்டு கேட்டு, உரிய ஆவணங்களை சமர்ப்பித்தனர். அதன்பின்னரும் நிவாரணத்தொகை கிடைக்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று சேதுபாவாசத்திரம் பூக்கொல்லையில் உள்ள வேளாண்மை அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் 2 மணி நேரம் நீடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்குமரன் மற்றும் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சமாதானம் செய்தனர். மேலும் சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வித்யா, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 10 நாட்களுக்குள் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக வேளாண்மை உதவி இயக்குனர் உறுதி அளித்தார். அதன்பேரில் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
Related Tags :
Next Story