வேப்பனப்பள்ளியில் குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை
வேப்பனப்பள்ளியில் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ளது கங்கோஜிகொத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதன் காரணமாக இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் குடிநீருக்காக அருகில் உள்ள பகுதிகளுக்கு நீண்ட தூரம் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வரவேண்டிய நிலை உள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று கங்கோஜிகொத்தூரை சேர்ந்த பெண்கள் சிலர் காலிக்குடங்களுடன் வேப்பனப்பள்ளி ஊராட்சி அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் குடிநீர் கேட்டு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story