இயற்கை பண்ணை விவசாயிகள் சங்க வீட்டு தோட்டத்தை கலெக்டர் ஆய்வு


இயற்கை பண்ணை விவசாயிகள் சங்க வீட்டு தோட்டத்தை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 1 March 2019 4:15 AM IST (Updated: 28 Feb 2019 11:45 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே இயற்கை பண்ணை விவசாயிகள் சங்க வீட்டு தோட்டத்தை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பழங்குடியினர் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் ஊட்டி அருகே பொக்காபுரம் மாரியம்மன் இயற்கை பண்ணை விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டு, 2 ஏக்கர் நிலம் குத்தகைக்கு பெறப்பட்டு வீட்டு தோட்டம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த சங்கத்தில் தலைவர், பொருளாளர் மற்றும் பொக்காபுரம், தொட்லிங்கி, தக்கல், குரும்பர்பள்ளம், குறும்பாடி, கோவில்பட்டி ஆகிய 5 குக்கிராமங்களை சேர்ந்த 150 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இதற்கிடையே பொக்காபுரம் மாரியம்மன் இயற்கை பண்ணை விவசாயிகள் சங்க வீட்டு தோட்டத்தை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சங்கத்திற்கு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு, இதுவரை ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மூன்று கட்டமாக வழங்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து சங்க உறுப்பினர்கள் இணைந்து அந்த இடத்தில் தோட்டத்தில் மல்லிகை நாற்றுகள் மற்றும் ஊடுபயிராக மிளகாய் நாற்றுகளை நடவு செய்து உள்ளனர். இந்த தோட்டத்திற்கு தேவையான தண்ணீர் டீசல் மோட்டார் எந்திரம் பொருத்தப்பட்டு, சொட்டுநீர் தெளிப்பான்கள் மூலம் பாய்ச்சப்படுகிறது.

இதன் மூலம் வறட்சி காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமலும், தண்ணீர் சிக்கனமாகவும், பயிர் செழித்து வளரவும் பயன்படும். இனிவரும் காலங்களில் இப்பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்கள் இம்முறையை பயன்படுத்தி, அதிகளவில் விவசாயம் செய்து தங்களது பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார். இதில் ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார் சாந்தினி மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

Next Story