யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தகவல்


யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தகவல்
x
தினத்தந்தி 1 March 2019 3:45 AM IST (Updated: 1 March 2019 12:09 AM IST)
t-max-icont-min-icon

யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி கூறினார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமயில் நேற்று நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:- வன விலங்குகளால் பயிர் சேதம் ஏற்பட்டு வருகிறது. பயிர் சேதத்திற்கான இழப்பீடு வழங்க கோரி 6 மாதங்களாக மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், குரங்குகளால் விளைநிலங்கள் அதிகளவில் சேதமாகிறது. குரங்குகளை பிடிக்க கூண்டுகளை மட்டும் வழங்குகின்றனர். விவசாயிகள் குரங்குகளை பிடித்து ஒப்படைக்கும் நிலை உள்ளதால், விவசாயிகளுக்கு குரங்குகளை பிடிக்க பயிற்சி அளிக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி அணை கட்ட நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வனப்பகுதியில் இடம் வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட இடத்திற்கான பட்டா இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு, பட்டா வழங்க வேண்டும் அல்லது அணைக்கு கொடுத்த நிலத்தை திரும்ப அளிக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி அணையில் மதகுகள், கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. அதற்கான ஒப்பந்தம் கோரப்படவில்லை. மதகுகள் மாற்றிமைக்கும் பணிகள் விரைந்து தொடங்கி, 4 மாதங்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும். முதல்போக சாகுபடிக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க வேண்டும். கூட்டுறவு கடன்கள் வழங்கப்படாமல் மூடக்கி வைக்கப்பட்டுள்ளது. சிட்டா, அடங்கல் கொடுத்தும் பயிர்கடன் வழங்கப்படவில்லை.

ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை பகுதியில் மழையின்றி கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால், குடிநீர் தட்டுப்பாடு, கால்நடைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, இப்பகுதியில் கிராமபுறங்களில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி பேசியதாவது:- யானைகளால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குரங்குகளை பிடிக்க விவசாயிகளுக்கு வனத்துறை மூலம் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அணை கட்ட நிலம் கொடுத்தவர்களுக்கு இடம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிருஷ்ணகிரி அணையில் மதகுகள் மாற்றியமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், கால்நடைபராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் மனோகரன், வேளாண்மை இணை இயக்குனர் சுசீலா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் கண்ணன், மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் நந்தகோபால், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண் மை) மோகன் விஜயகுமார், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர், மத்தூர் ஒன்றிய செயலாளர் ரவீந்தராசு மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story