குவாரியில் மணல் அள்ள அனுமதி வழங்கக்கோரி மாட்டு வண்டிகளுடன் தொழிலாளர்கள் சாலை மறியல்
திட்டக்குடியில் குவாரியில் மணல் அள்ள அனுமதி வழங்கக்கோரி மாட்டு வண்டிகளுடன் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திட்டக்குடி,
திட்டக்குடி தாலுகாவுக்குட்பட்ட ஆதமங்கலம், எரப்பாவூர், கொட்டாரம், மா.புடையூர் உள்ளிட்ட 30 கிராமங்களை சேர்ந்த மாட்டுவண்டி தொழிலாளர்கள் வெள்ளாற்று மணல் குவாரியில் மணல் அள்ள உடனடியாக அனுமதி வழங்க வேண்டும், பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகளில் மணல் அள்ளுவதை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஜீவா மாட்டுவண்டி தொழிலாளர் சங்கத்தின் திட்டக்குடி வட்டக்கிளை சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலையில் தொழிலாளர்கள் மாட்டு வண்டிகளுடன் திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு திரண்டனர். இதுபற்றி அறிந்த திட்டக்குடி தாசில்தார் கண்ணன், சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சுமூக தீர்வு எட்டப்படாததால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் திட்டக்குடி-விருத்தாசலம் சாலையில் மாட்டு வண்டிகளுடன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதுபற்றி அறிந்த திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை திட்டக்குடி போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி, அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாட்டு வண்டி தொழிலாளர்களின் இந்த போராட்டத்தால் திட்டக்குடி-விருத்தாசலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story