ராஜாவாய்க்காலில் முன்அறிவிப்பு இன்றி தண்ணீர் நிறுத்தம் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
ராஜா வாய்க்காலில் முன்அறிவிப்பு இன்றி தண்ணீர் நிறுத்தப்பட்டு இருப்பதாக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
நாமக்கல்,
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் இடையே நடந்த விவாதம் வருமாறு :-
சந்திரசேகரன் :- தொப்பம்பட்டி, பள்ளிப்பட்டி ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு குடிநீர் பாட்டில் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மாவட்ட வருவாய் அலுவலர் :- பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்பு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நல்லாகவுண்டர் :- இயற்கை விவசாயம் மிகவும் குறைவு. இதில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படுவது இல்லை. ஆனால் ரசாயன விவசாயத்தில் குறிப்பாக ‘கிலிபோஸ் சேட்’ என்னும் பூச்சிகொல்லி மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் விளைவிக்கப்படும் காய்கறிகளில் மனிதர்களுக்கு கேடு என அறிந்து கொண்ட கேரள அரசு ‘கிலிபோஸ் சேட்’ என்னும் பூச்சி கொல்லியை தடை செய்து விட்டது. தமிழகத்திலும் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாண்மை இணை இயக்குனர் :- தமிழகத்திலும் ‘கிலிபோஸ் சேட்’ என்னும் பூச்சிக்கொல்லி தடை செய்யப்பட்டு விட்டது. இவை மருந்து கடைகளில் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப் படும்.
குப்புதுரை :- ராஜா வாய்க்கால் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது ஆகும். தற்போது இந்த வாய்க்கால் மூலம் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனவசதி பெற்று வருகின்றன. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை இந்த வாய்க்காலில் பராமரிப்புக்காக தண்ணீர் நிறுத்தப்படும். மீதமுள்ள 350 நாட்களும் தண்ணீர் திறந்து விடப்படும். வழக்கமாக விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து கூட்டம் நடத்தி ஆலோசனை செய்த பிறகே தண்ணீர் நிறுத்தப்படும்.
ஆனால் இந்த ஆண்டு சரபங்கா அதிகாரிகள் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி தன்னிச்சையாக கடந்த 24-ந் தேதியே ராஜா வாய்க்காலில் தண்ணீரை நிறுத்தி விட்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விளக்கம் கேட்க வேண்டும். உடனடியாக வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். பராமரிப்பு பணிகளை ஏப்ரல், மே மாதங்களில் செய்ய வேண்டும்.
(இதே கோரிக்கையை குமாரபாளையம் வாய்க்கால் மற்றும் மோகனூர் வாய்க்கால் பாசன விவசாயிகளும் எழுந்து நின்று வலியுறுத்தியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.)
மாவட்ட வருவாய் அலுவலர் :- ராஜா வாய்க்கால் ரூ.1 கோடியே 5 லட்சம் செலவில் பராமரிப்பு செய்யப்பட உள்ளது. அதற்காக தண்ணீரை நிறுத்தி உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.
ராஜேந்திரன் :- பால் கொள்முதல் விலையை உயர்த்தி 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது பாலுக்கான உற்பத்தி செலவு பல மடங்கு உயர்ந்து விட்டது. எனவே பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.10-ம், எருமைபாலுக்கு லிட்டருக்கு ரூ.15-ம் உயர்த்த வேண்டும். நாமக்கல் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து மானிய விலையில் தீவனம் வழங்க வேண்டும். இவ்வாறு விவாதங்கள் நடந்தன.
இந்த கூட்டத்தில் கூட்டுறவு இணைபதிவாளர் பாலமுருகன், வேளாண்மை இணை இயக்குனர் சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story