சத்துணவு சாப்பிட்டதால் மயக்கம்: 37 மாணவ-மாணவிகள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்


சத்துணவு சாப்பிட்டதால் மயக்கம்: 37 மாணவ-மாணவிகள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்
x
தினத்தந்தி 1 March 2019 4:00 AM IST (Updated: 1 March 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

சத்துணவு சாப்பிட்டதால் மயக்கம் ஏற்பட்டு 37 மாணவ-மாணவிகள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.

தர்மபுரி,

தர்மபுரி அருகே உள்ள வெள்ளோலையில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் சத்துணவு சாப்பிட்ட மாணவ-மாணவிகளில் 37 பேருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இவர்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். சத்துணவில் பல்லி விழுந்ததால் மாணவ-மாணவிகளுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் சிகிச்சை பெற்ற மாணவ-மாணவிகளை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், முன்னாள் அமைச்சர்கள் பி.பழனியப்பன், முல்லைவேந்தன், தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் பார்த்து நலம் விசாரித்தனர்.

நேற்று பிற்பகலில் மாணவ-மாணவிகள் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திரும்பி சென்றனர். சத்துணவு சாப்பிட்ட மாணவ-மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் சத்துணவு சுகாதாரமாகவும், பாதுகாப்பான முறையிலும் சமைக்கப்படுகிறதா? என்பதை தினமும் பார்வையிட்டு இத்தகைய சம்பவங்கள் நடப்பதை தவிர்க்க வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. சத்துணவு சமைப்பதில் ஏற்பட்ட கவனக்குறைவே மாணவ-மாணவிகளுக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு காரணம் என்று அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதற்கு காரணமானவர்கள் மீது துறைரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Next Story