3 மாவட்ட மக்களின் 60 ஆண்டு கனவு நிறைவேறியது ரூ.1,652 கோடி செலவில் அத்திக்கடவு-அவினாசி திட்டம்
ரூ.1,652 கோடி செலவில் செயல்படுத்தப்படும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதன்மூலம் 3 மாவட்ட மக்களின் 60 ஆண்டு கனவு நிறைவேறியது.
அவினாசி,
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஏரிகள், குளங்களில் தண்ணீர் நிரப்பி அதன்மூலம் நிலத்தடி நீரை செறிவூட்டும் வகையிலும், பில்லூரில் இருந்து பவானி ஆற்றில் உபரியாக செல்லும் தண்ணீரை பாசனத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்தும் வகையிலும் அத்திக்கடவு-அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை 60 ஆண்டுகளுக்கு முன்பு எழுந்தது. அப்போதைய எம்.எல்.ஏ.வாக இருந்த மாரப்பகவுண்டர் தனது வாழ்நாள் கோரிக்கையாக அத்திக்கடவு-அவினாசி திட்டத்தையே வைத்திருந்தார். காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது இந்த திட்டத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டார். ஆனால் அவர் பதவியை விட்டு சென்றபின் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
சில ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்த கோரிக்கை தலை தூக்கியது. எனவே, தேர்தல்களின் போது அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் வாக்குறுதியாக அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை வைத்தன. ஆனால் திட்டம் நிறைவேற்றுவதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. 1980-ம் ஆண்டில் எம்.எஸ்.உதயமூர்த்தி மேற்கொண்ட பிரசாரம் விவசாயிகள் மத்தியில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியது. பின்னர் 9 நாட்கள் அவரது தலைமையில் நடந்த பாதயாத்திரை மக்கள் போராட்டமாக உருவாகியது. சரத்குமார் தலைமையிலான மோட்டார் சைக்கிள் பிரசாரம் இன்னும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
விவசாயிகளின் தொடர் போராட்டம் மற்றும் கனவை நிறைவேற்ற அரசியல் கட்சிகள் முன்வராத நிலையில் 2001-ம் ஆண்டு தேர்தலில் விவசாயிகள் சார்பில் மோகன்குமார் என்பவர் போட்டியிட்டார். பஸ் சின்னத்தில் போட்டியிட்ட அவர் 38 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றது, அரசியல் அரங்கத்தில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை உன்னிப்பாக கவனிக்க வைத்தது. எனவே அப்போதே திட்ட ஆய்வுப்பணிகள் தொடங்கியது. ஆனாலும் பணிகளை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவில்லை. இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு அவினாசியில் விவசாயிகள் நடத்திய தொடர் உண்ணா விரத போராட்டம், மொட்டை அடிக்கும் போராட்டம் மற்றும் இதைத் தொடர்ந்து கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களிடம் ஏற்பட்ட எழுச்சியால் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டது. எனவே உடனடியாக ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டன.
இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முயற்சியால் அத்திக்கடவு-அவினாசி பாசனம், குடிநீர் மற்றும் நிலத்தடிநீர் செறிவூட்டும் நீரேற்று திட்டம் என்ற பெயரில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.1,652 கோடியில் திட்டப்பணிகள் தொடங்கப்பட உள்ளன.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா திருப்பூர் மாவட்டம் அவினாசி புதுப்பாளையம் பகுதியில் நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு தமிழக சட்டமன்ற சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, கே.சி.கருப்பணன், சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு விவசாயிகள், பொதுமக்களின் கரகோஷத்துக்கிடையே அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். தொடர்ந்து நடந்த விழாவில் திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், தாட்கோ, வேளாண்மைத்துறை, கைத்தறி துணிநூல்துறை, வருவாய்த்துறை மூலம் ரூ.66 லட்சத்து 57 ஆயிரத்து 20 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்த விழா மூலம் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 4 ஆயிரத்து 770 பேருக்கு மொத்தம் ரூ.8 கோடியே 52 லட்சம் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் சத்தியபாமா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தோப்பு என்.டி.வெங்கடாசலம், உ.தனியரசு, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வரவேற்றார். முடிவில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நன்றி கூறினார்.
முன்னதாக திருப்பூரில் நடந்த மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தொடக்க விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழா முடிந்ததும் அவினாசி நோக்கி வந்தார். அப்போது அவருக்கு வழி நெடுகிலும் விவசாயிகள், பொதுமக்கள் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். அவினாசியில் உள்ள போராட்ட குழுவினர் அவினாசி லிங்கேசுவரர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி அங்கிருந்து விழா நடந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்தனர். விழாவையொட்டி நேற்று அவினாசி நகரமே விழாக்கோலம் பூண்டு இருந்தது. தங்கள் 60 ஆண்டுகால கனவு நிறைவேறியதை கொண்டாடும் வகையில் விவசாயிகள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி மகிழ்ந்தார்கள்.
Related Tags :
Next Story