பிளஸ்-2 பொதுத்தேர்வு: திருவாரூர் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 577 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர் கலெக்டர் தகவல்
திருவாரூர் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 577 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வை எழுதுகின்றனர் என்று கலெக்டர் ஆனந்த் தெரிவித்தார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 577 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வை எழுதுகின்றனர் என்று கலெக்டர் ஆனந்த் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 19-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் 53 தேர்வு மையங்களில் 6 ஆயிரத்து 314 மாணவர்கள், 8 ஆயிரத்து 263 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 577 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இதேபோல் பிளஸ்-1 வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 6-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடக்கிறது. மாவட்டத்தில் 51 தேர்வு மையங்களில் 5 ஆயிரத்து 731 மாணவர்கள், 7 ஆயிரத்து 710 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 441 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.
மேலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 14-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள 66 தேர்வு மையங்களில் 8 ஆயிரத்து 141 மாணவர்கள், 8 ஆயிரத்து 234 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 375 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு எழுதும் மாணவர்கள் முன்னேற்பாடாக காலை 9 மணிக்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வினை சிறப்பான முறையில் எழுதிட வேண்டும். மேலும் தேர்வு மையத்தில் செல்போன், கால்குலேட்டர் எடுத்து செல்ல அனுமதி இல்லை.
தேர்வு மையத்தில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களை கண்காணிக்க பள்ளி கல்வித்துறை அலுவலர்களை கொண்ட 6 சிறப்பு பறக்கும் படை, 940 அறை கண்காணிப்பாளர்கள், 15 வழித்தட அலுவலர்கள், 53 முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் 84 நிலையான படை அமைக்கப்பட்டுள்ளது. ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவ-மாணவிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மையங்களுக்கு வந்து செல்ல போதுமான அளவில் போக்குவரத்து வசதி மற்றும் தேர்வு நடைபெறும் நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் தயார் நிலையில் இருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வு எழுதும் மாணவ-மாணவியர்களுக்கு தேர்வில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story