பணியிட மாறுதலுக்கு கண்டனம், வருவாய்த்துறை அலுவலர்கள் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம்
மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதலுக்கு கண்டனம் தெரிவித்து வருவாய்த்துறை அலுவலர்கள் தங்களது பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமக்குடி,
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக பணிபுரிபவர்களை மாற்றம் செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுஉள்ளது. இதன்படி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் தாசில்தார்களை மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் செய்ய உத்தரவிடப்பட்டுஉள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசின் இத்தகைய செயலை கண்டித்தும், தாசில்தார்கள் பணியிட மாற்றத்தை ரத்து செய்யக்கோரியும், இதற்கு துணை போகும் மாவட்ட கலெக்டரை மாற்றம் செய்ய வலியுறுத்தியும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா அலுவலகங்களிலும் பணியாற்றும் தாசில்தார் முதல் அலுவலக உதவியாளர்கள் வரையிலான வருவாய்த்துறை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் மற்றும் பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று தங்களது பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பழனிக் குமார், மாவட்ட இணை செயலாளர் பரமசிவன், ஆதிதிராவிடர் நலத்துறை துணை தாசில்தார் ராஜகுரு, வட்டார தலைவர் முருகன் மற்றும் 44 பெண் அலுவலர்கள் உள்பட 98 பேர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பழனிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:- தேர்தல் நடைபெறும் போது வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் அனைத்து பணிகளும் தொகுதியில் அனுபவம் வாய்ந்த எங்களுக்குத்தான் தெரியும். வெளிமாவட்டங்களில் இருந்து புதியவர்கள் வந்தால் அவர்களுக்கு வாக்குச்சாவடி மையங்களைபற்றி தெரியாது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் செயல்பட்டு வரும் தமிழக அரசையும், மாவட்ட கலெக்டரையும் கண்டித்து தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு எங்களின் கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். பணியிட மாறுதலை ரத்து செய்யாவிட்டால் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்க மாநில மைய முடிவின்படி வருகிற 4-ந்தேதி முதல் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story