நாகையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்


நாகையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 March 2019 3:45 AM IST (Updated: 1 March 2019 2:10 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

நாகப்பட்டினம், 

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நாகை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் சரபோஜி:

2017-2018-ம் ஆண்டு பயிர்க்காப்பீட்டு தொகையை காலம் தாழ்த்தாமல் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். பயறு, உளுந்து வகைகளை நடப்பாண்டில் அரசே கொள்முதல் செய்து, பயிர் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.

கல்லணை பாசனதாரர் முன்னேற்ற சங்க குழு உறுப்பினர் கணேசன்:

பாரத பிரதமர் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கும் மானிய தொகை ரூ.6 ஆயிரம் வழங்குவதற்கு மாவட்ட அளவில் கணக்கெடுக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. விவசாயிகளுக்கு மானியம் வழங்க தேர்வு செய்த பயனாளிகளின் பட்டியலை அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒட்ட வேண்டும். தமிழக அரசு அறிவித்திருக்கும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராம விவசாயிகள் சங்க தலைவர் மணியன்:

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நெல், சவுக்கு உள்பட அனைத்து பயிர்களுக்கும் அரசு நிவாரணம் தருவதாக அறிவித்தது. தற்போது கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் சவுக்கு எக்டேருக்கு ரூ.13 ஆயிரத்து 500 வழங்குவதாக அறிவித்த நிலையில், இதுவரை சவுக்கு மரத்திற்குரிய நிவாரணம் வழங்கவில்லை. இதேபோல நெல் சாகுபடிக்கு உரிய நிவாரணமும் வழங்கப்படாமல் உள்ளது. எனவே, சவுக்கு மரங்களுக்குரிய உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலையூர் விவசாயி தமிழ்செல்வன்: நாகை பாலையூர் ஊராட்சியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்படும் குடிநீர் கடந்த ஒரு மாத காலமாக சரிவர வருவது இல்லை. தமிழக அரசு மூலம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, இதுநாள் வரை தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுத்து பாலையூர் பகுதிக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

கூட்டத்தில் நேரடி கொள்முதல் நிலையத்தில் வழங்கிய நெல்லுக்கான தொகையை பல நாட்கள் ஆகியும், தற்போது வரை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்றும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக கரியாப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கலெக்டர் முன்னிலையில் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தாங்கள் கொண்டு வந்த மனுக்களை கிழித்து பறக்க விட்டனர். மேலும் வாய்க்கரிசியை தரையில் கொட்டி போராட்டம் நடத்தினர். இதனால் குறைதீர்க்கும் கூட்டம் பாதியிலேயே முடித்தது. 

Next Story