புயலால் சேதமடைந்த படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி நாகை மீனவர்கள் காத்திருப்பு போராட்டம் பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
புயலால் சேதமடைந்த படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி நாகை மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம்,
கஜா புயலில் பாதிக்கப்பட்ட நாகை தாலுகா மீனவ குடும்பங்களுக்கு அரசு அறிவித்த நிவாரண தொகை வழங்காததை கண்டித்தும், சேதமடைந்த படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரியும் நாகை தாலுகா மீனவர்கள் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு நாகூர், சாமாந்தான்பேட்டை, கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, கல்லார் உள்ளிட்ட மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமை தாங்கினர். நாகை-நாகூர் மெயின் சாலையில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட மீனவர்கள் அமர்ந்து வெயிலை பொருட்படுத்தாமல் தரையில் அமர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
அப்போது நீண்ட நேரம் வெயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சாமாந்தான்பேட்டையை சேர்ந்த பூமாதேவி என்ற பெண் மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மீனவ பஞ்சாயத்தார்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அப்போது கலெக்டர் உடனடியாக நிவாரணம் வழங்க அரசிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் நாகை-நாகூர் மெயின் சாலையில் 1 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story