கீழடியில் 5-வது கட்ட அகழாய்வு இன்னும் 2 மாதத்தில் தொடங்கும் அமைச்சர் பாண்டியராஜன் தகவல்
கீழடியில் 5-வது கட்ட அகழாய்வு இன்னும் 2 மாதத்தில் தொடங்கும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் சிற்பக்கலை பயிற்சி திட்டம் மற்றும் யோகா மையம் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பதிவாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். சிற்பத்துறை பேராசிரியர் கந்தன் வரவேற்றார்.
விழாவில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்து கொண்டு சிற்பக்கலை பயிற்சி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியும், யோகா மையத்தை தொடங்கி வைத்தும் பேசினார்.
அவர் பேசியதாவது:-
தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பயிற்சி முடித்தவர்கள் சிறந்தவர்களாக உருவாக வேண்டும். இங்கு பயிற்சி முடித்து வெளியே செல்லும் போது அவர்கள் சிறந்த தொழில் முனைவோர்களாக உருவாக்க வேண்டும். இதற்காக மாணவர்களின் திறனை வளர்க்க பயிற்சி அளிக்க வேண்டும். சிற்பக்கலை பயிற்சி பெறும் மாணவர்கள் படித்து முடித்து சிற்பக்கூடம் அமைக்க அரசு உதவி செய்கிறது.
மேலும் தமிழ்ப்பல்கலைக்கழகம் தலைசிறந்த பல்கலைக்கழகமாக உருவெடுத்து வருகிறது. இங்கு மாணவர்கள் சேர்க்கையை இன்னும் அதிகரிக்க செய்ய வேண்டும். அப்போதுதான் மத்திய அரசிடம் இருந்து இன்னும் நிதிகளை பெற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார். முடிவில் பேராசிரியர் பாலச்சந்திரன் நன்றி கூறினார்.
முன்னதாக அமைச்சர் க.பாண்டியராஜன் நிருபர் களிடம் கூறியதாவது:-
தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பல திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பு சார்ந்த பயிற்சிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல்கலைக்கழக நல்கலைக்குழு சார்பில் 2007-ல் தமிழ்ப்பல் கலைக்கழகம் தரச்சான்று பெற்று இருந்தது.
அதன் பின்னர் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நமக்கு ‘பி பிளஸ்’ தரச்சான்று கிடைத்து உள்ளது. மொழி சார்ந்த, பண்பாடு சார்ந்த பல்கலைக்கழகத்தை ஒப்பிடுகையில் சராசரிக்கும் மேற்பட்ட தரச்சான்று தமிழ்ப்பல் கலைக்கழகத்திற்கு கிடைத்து உள்ளது. இதனை ‘ஏ பிளஸ்’ தரத்துக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு ரூ.14 கோடி ஒதுக்கி உள்ளது. இதன் மூலம் சுற்றுச்சுவர், கரிகால்சோழன் கலையரங்கம் மேம்படுத்துவது, சிற்பக்கலைக்கூடம் அமைப்பது, நூல்கள் மின்னாக்கம், பண்பாட்டு மையம், சொற்குவை திட்டம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் மத்திய அரசு உயர்கல்விக்காக வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்திய அளவில் மொழி சார்ந்த பல்கலைக்கழகங்களில் தர நிர்ணயத்தில் தமிழ்ப்பல்கலைக்கழகம் முதலிடம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்வளர்ச்சி துறைக்கு கடந்த ஆண்டு இருமடங்கு நிதி ஒதுக்கப்பட்டது. அது குறைவு தான். இந்த ஆண்டு முதல்-அமைச்சர் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வார். தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆய்வு சார்ந்த 40 திட்டங்களை பேராசிரியர்கள் செயல்படுத்தி வருகிறார்கள்.
கீழடியில் 5-வது கட்ட அகழாய்வு இன்னும் விரிவாக நல்ல உலகத்தரம் மிக்க பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியாற்றும் வகையில் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த ஆய்வு 2 மாதங்களில் தொடங்க உள்ளது. முதல் 4 ஆய்வுகளில் கண்டெடுத்த 14 ஆயிரத்து 500 பொருட்களையும் காட்சிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக 1 ஏக்கரில் அகழ்வைப்பகம் ஏற்படுத்த அரசு ரூ.1 கோடி ஒதுக்கி உள்ளது. மத்திய அரசிடமும் ரூ.2 கோடி கேட்டுள்ளோம்.
தமிழகத்தில் உள்ள 36 அருங்காட்சியகத்தில் 1 லட்சத்து 22 ஆயிரம் அரும்பொருட்கள் உள்ளன. அதில் 10 சதவீதம் தான் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அருங்காட்சியகம் விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 4 அருங்காட்சியகத்துக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேனி, திருவண்ணாமலையில் புதிய அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. அரியலூரில் டைனோசர் அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்பட உள்ளது.
அருங்காட்சியகங்களில் இருக்கிற பொருட்களை காட்சிப்படுத்த முயற்சி செய்து வருகிறோம். ஆண்டுக்கு ஒரு வரலாற்று சின்னங்களை மேம்படுத்தி வருகிறோம். கடந்த ஆண்டு தரங்கம்பாடி கோட்டை ரூ.4 கோடியில் உலகப்புகழ்பெற்ற இடமாக மாற்றப்பட்டு உள்ளது. அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் 91 வரலாற்று சின்னங்கள் உள்ளன. இதில் இந்த ஆண்டு கன்னியாகுமரி கோட்டை உள்பட 12 கோட்டைகள் மேம்படுத்த ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story