ஒரு கட்சியின் தலைவர் என்பதை மறந்துவிட்டு அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணியை தரம் தாழ்ந்து ஸ்டாலின் விமர்சிக்கிறார் வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு


ஒரு கட்சியின் தலைவர் என்பதை மறந்துவிட்டு அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணியை தரம் தாழ்ந்து ஸ்டாலின் விமர்சிக்கிறார் வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 1 March 2019 3:45 AM IST (Updated: 1 March 2019 2:10 AM IST)
t-max-icont-min-icon

ஒரு கட்சியின் தலைவர் என்பதை மறந்து விட்டு அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணியை மு.க.ஸ்டாலின் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதாக வைத்திலிங்கம் எம்.பி. குற்றம் சாட்டினார்.

ஒரத்தநாடு,

முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஒரத்தநாடு தொகுதி அ.தி.மு.க. சார்பில் ஒரத்தநாடு பஸ் நிலையம் அருகே நடந்தது. கூட்டத்துக்கு அ.தி.மு.க. ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் கோவி.தனபால் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் தஞ்சாவூர் துரை.வீரணன், திருவோணம் ஆர்.சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதா தொட்டில் குழந்தை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைத்தார். அவருடைய மறைவுக்கு பிறகு, அவரது வழியில் தான் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏழை-எளிய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து நல்லாட்சி நடக்கிறது. காவிரி உள்ளிட்ட பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க அ.தி.மு.க. நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து போராடியது.

அ.தி.மு.கவை அழித்துவிட வேண்டும். இந்த ஆட்சியை கவிழ்த்துவிட வேண்டும் என்று திட்டம் போட்டவர்கள் இன்று தனி மரமாக நிற்கிறார்கள். இவர்கள் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு காணாமல் போவார்கள்.

தான் ஒரு கட்சியின் தலைவர் என்பதை மறந்து விட்டு மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி பற்றி தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார். வருகிற தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற சபதம் ஏற்று கட்சி தொண்டர்கள் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. பேச்சாளரும், சினிமா நடிகருமான ஆர்.சுந்தர்ராஜன், கு.பரசுராமன் எம்.பி., தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் துரை.திருஞானம், மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஆர்.காந்தி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் அமுதாரவிச்சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் என்.பழனிவேல் வாண்டையார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மாற்று கட்சிகளை சேர்ந்த பலர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

முன்னதாக ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் வரவேற்றார். முடிவில் ஒரத்தநாடு நகர செயலாளர் த.செல்வம் நன்றி கூறினார்.

Next Story