ஈரோட்டில் நள்ளிரவில் துணிகரம், 3 பேரை கட்டிப்போட்டு 35 பவுன் நகை கொள்ளை


ஈரோட்டில் நள்ளிரவில் துணிகரம், 3 பேரை கட்டிப்போட்டு 35 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 1 March 2019 4:30 AM IST (Updated: 1 March 2019 3:04 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் நள்ளிரவில் 3 பேரை கட்டிப்போட்டு 35 பவுன் நகையை கொள்ளை அடித்து சென்ற கொள்ளையர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு, 

ஈரோடு பழையபாளையம் இந்திராகாந்தி வீதியை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 52). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி வள்ளியம்மை. இவர்களுக்கு கவுதம் (22), ஸ்ரீராம் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் கவுதம் ஓசூரில் வேலை பார்த்து வருகிறார்.

ஸ்ரீராம் திண்டலில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார். ராமநாதன் தனது வீட்டின் கீழ் தளத்தை வாடகைக்கு விட்டுள்ளார். முதல் தளத்தில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு முடித்த பின்னர் ராமநாதன் தனது மனைவி மற்றும் மகனுடன் தூங்கச்சென்றார். நள்ளிரவு ஒரு மணி அளவில் வீட்டின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. இதில் கண் விழித்த ராமநாதன் யார் என்று பார்ப்பதற்காக வாசல் பகுதிக்கு சென்றார்.

அப்போது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட முயன்றார். அதற்குள் அந்த மர்ம நபர்கள் ராமநாதனின் கழுத்தில் அரிவாளை வைத்தனர். பயந்து போய் அவர் சத்தம் போடவில்லை.

இதற்கிடையே வள்ளியம்மை, ஸ்ரீராமும் தூக்கத்தில் இருந்து எழுந்தனர். இதைத்தொடர்ந்து மர்ம நபர்கள் ராமநாதன், வள்ளியம்மை, ஸ்ரீராம் ஆகியோரை கயிற்றினால் கட்டிப்போட்டு நகை, பணம் இருக்கும் இடத்தை கூறும்படி மிரட்டி உள்ளனர். ஆனால் அவர்கள் கூற மறுத்து உள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பலில் ஒருவன் தான் வைத்திருந்த அரிவாளை திருப்பி பிடித்து வள்ளியம்மையின் கையில் ஓங்கி அடித்து உள்ளான். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு வலியால் துடித்தார். உடனே பயந்து போன அவர், பீரோவில் நகை இருப்பதாக கூறினார்.

பின்னர் அந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 2 கண்காணிப்பு கேமராக்களை உடைத்தனர். அதைத்தொடர்ந்து பீரோவை திறந்து அதில் இருந்த ஒரு வைர நெக்லசுடன் சேர்த்து 35 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள், டி.வி., 6 செல்போன்களையும் கொள்ளை அடித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பிறகு சிறிது நேரத்தில் 3 பேரும் தாங்களாகவே கட்டுகளை அவிழ்த்துக்கொண்டார்கள். மேலும் இதுபற்றி ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.

இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்கள் 4 பேரையும் வலைவீசி தேடி வந்தார்கள்.

இந்தநிலையில் கோபி பகுதியில் போலீசார் நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார்சைக்கிளில் 2 பேர் வந்தார்கள்.

அவர்களை பார்த்தும் போலீசார் சந்தேகப்பட்டு மோட்டார்சைக்கிளை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த வாலிபர் இறங்கி ஓடிவிட்டார். இதனால் உஷாரான போலீசார் மோட்டார்சைக்கிளை ஓட்டிவந்த வாலிபரை சுற்றிவளைத்து பிடித்து தீவிரமாக விசாரித்தனர். இதில் அவர் ஈரோடு அருகே உள்ள பெருமாள்மலையை சேர்ந்த சத்தியசீலன் (22) என்பதும், ஈரோட்டில் நடந்த 35 பவுன் நகை கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரில் இவரும் ஒருவர் என்பதும் தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர். மற்ற 3 பேரும் எங்கு உள்ளார்கள்? மோட்டார்சைக்கிளில் இருந்து இறங்கி ஓடியவரும் கொள்ளையில் ஈடுபட்டவரா? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story