தேசிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தகவல்
தேசிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
2018-19-ம் கல்வியாண்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி-பல்கலைக்கழகத்தில் படிக்கும் சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் ஊக்க உதவித் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் ( www.sdat.tn.gov.in) மூலம் மட்டுமே வரவேற்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், கல்லூரி- பல்கலைக்கழக மாணவர்களுக்கு ரூ.13 ஆயிரமும் ஊக்கத் தொகையாக வழங்கப்பட உள்ளது.
1.7.2017 முதல் 30.6.2018 வரை முடிய உள்ள கால கட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்றவர்கள் மட்டும் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்பவர்கள், குழு போட்டிகள் என்றால் முதல் 2 இடங்களையும், தனிநபர் போட்டி என்றால் முதல் 3 இடங்களையும் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். தேசிய அளவிலான போட்டிகள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டுக்கள் கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு ஆணையம்-மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் அகில இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் ஆகியவற்றினால் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தினை வருகிற 12-ந் தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த 7 வேலை நாட்களுக்குள் தங்களது அசல் சான்றிதழை சம்பந்தப்பட்ட மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் சரிபார்த்தலுக்காக காண்பிக்க வேண்டும். ஒரு வேளை கடைசி நாளன்று விண்ணப்பதாரர் விண்ணப்பித்தால், அதிலிருந்து 7 வேலை நாட்களுக்குள் அசல் சான்றிதழை காண்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தினை அலுவலக நாட்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0461- 2321149 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story