அரசு பள்ளியில் வட்ட மேஜையை சுற்றி மாணவர்களுடன் தரையில் அமர்ந்து பாடம் கற்பிக்கும் ஆசிரியைகள்
அரசு பள்ளியில் வட்ட வடிவ மேஜையை சுற்றி மாணவ, மாணவிகளுடன் தரையில் அமர்ந்து ஆசிரியைகள் பாடம் நடத்துகின்றனர்.
தா.பேட்டை,
தா.பேட்டை ஒன்றியம் ஜம்புமடை ஊராட்சியை சேர்ந்தது ஆண்டிப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 30 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியையாக விஜயலட்சுமியும், உதவி ஆசிரியையாக நவமணியும் பணிபுரிந்து வருகின்றனர்.
பள்ளியில் தலைமை ஆசிரியை, உதவி ஆசிரியை இணைந்து ரூ.15 ஆயிரம் செலவில் புதிய வட்ட வடிவிலான 4 மேஜைகளை தச்சர் மூலம் தயார் செய்தனர். ஒரு வட்ட மேஜையை சுற்றி 8 மாணவ, மாணவிகள் அமர்ந்து படிக்கின்றனர். இந்த முறையில் மாணவ, மாணவிகளுடன் ஆசிரியைகளும் தரையில் அமர்ந்து பாடம் கற்பிப்பதால் மாணவ, மாணவிகள் பாடத்தை எளிதான முறையில் படிக்கின்றனர். அவர்களுடைய கவனம் சிதறுவதில்லை.
வட்ட வடிவ மேஜை மீது மாணவ, மாணவிகள் புத்தகங்களை வைத்து எழுதி, படிக்கும்போது அவர்களுக்கு மிகுந்த ஆர்வம் ஏற்படுகிறது. அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் சந்திப்பு கூட்டங்களில் வட்ட வடிவ மேஜையில் அமர்ந்து பேசி முடிவு எடுப்பதை பார்த்து, அந்த வகையில் மாணவ, மாணவிகளுக்கு நல்லமுறையில் கல்வி கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்று வட்ட வடிவ மேஜை அமைத்து பாடம் நடத்துவதாக தலைமை ஆசிரியை கூறினார்.
Related Tags :
Next Story