தூக்குப்போட்டு சாமியார் தற்கொலை கள்ளக்காதல் காரணமா? போலீஸ் விசாரணை
கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் சாமியார் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
அந்தியூர்,
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 49). சாமியாரான இவர் ஈரோடு மாவட்டம் பர்கூர் ஒசூரில் வேலுமணி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் குடிசை அமைத்து, தன்னை தேடி வருபவர்களுக்கு பரிகார பூஜைகள் செய்து வந்தார். அவர் நடத்தும் யாக பூஜைகளில் அந்த பகுதியை சேர்ந்த பெண்களும் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை சேர்ந்த ஒரு பெண் சாமியார் சிவராஜ் நடத்தும் அனைத்து பூஜைகளிலும் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனால் சிவராஜுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக தெரிகிறது.
இந்த விவகாரம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும், பெண் பக்தர்களுக்கும் தெரிய வந்ததால் அவர்கள் சிவராஜை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அவர் மனவேதனையில் இருந்தாக தெரிகிறது. இதன்காரணமாக நேற்று காலை சிவராஜ் தான் தங்கியிருந்த குடிசை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சிவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அந்த வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், ‘தர்மம் செத்துவிட்டது. என்னை பல்வேறு பெண்களோடு தொடர்பு படுத்தி பேசுகிறார்கள். இதில் எனக்கும், அந்த பெண்ணுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை’ என்று கூறப்பட்டு இருந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாமியார் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story