விருதுநகரில், ரூ.10 கோடி மதிப்பீட்டில் கால்நடை தீவன தொழிற்சாலை
விருதுநகரில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கால்நடை தீவன தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
விருதுநகர்,
சிவகாசியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள நவீன ஆவின் பாலகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா ஆவின் நிர்வாக இயக்குனர் காமராஜ் தலைமையிலும், ராதாகிருஷ்ணன் எம்.பி. முன்னிலையிலும் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு நவீன பாலகத்துக்கு அடிக்கல் நாட்டி அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-
தமிழகத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.250 கோடி மதிப்பிலான பால் மற்றும் ரூ.25 கோடி மதிப்பிலான பல்வேறு வகையான ஆவின் பால் உப பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்களின் நலன் கருதி ஆவின் நிறுவனம் தனது பணியின் மேலும் ஒரு மைல் கல்லாக தக்க பரிசோதனைக்குப் பிறகு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று தமிழ்நாட்டின் ஆவின் பால் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்திட ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பால் பண்ணையில் ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் புதிய தளவாட நிறுவனங்கள் நிறுவப்பட்டு உள்ளது. திருச்சுழியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பால் மொத்த குளிர்விக்கும் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. விருதுநகர் பால் குளிரூட்டும் நிலையத்தில் ரூ.76 லட்சம் மதிப்பீட்டில் சிவகாசி சாட்சியாபுரத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டிலுமாக 3 புதிய நவீன ஆவின் பாலகங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக தற்போது காமராஜ் பூங்கா வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள நவீன ஆவின் பாலகத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. விருதுநகரில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கால்நடை தீவன தொழிற்சாலையும், ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பால் உப பொருட்கள் பண்ணையும் அமைக்கப்பட உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆவின் பாலகங்கள் திறக்கப்பட உள்ளன. இதே போன்று அனைத்து மாநில தலைநகரங்களிலும் நவீன பாலகங்கள் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் கண்ணன், துணைத் தலைவர் கே.கண்ணன், பொது மேலாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story