சிவப்பு நிற ரேஷன்கார்டுகளுக்கு 3 மாதம் இலவச அரிசி கவர்னர் கிரண்பெடி அனுமதி
சிவப்பு நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு 3 மாதம் இலவச அரிசி வழங்கவும், மஞ்சள் நிற கார்டுதாரர்களுக்கு பணமாக வங்கிக்கணக்கில் செலுத்தவும் கவர்னர் கிரண்பெடி அனுமதி அளித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை கவர்னர் கிரண்பெடியின் செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2018-19-ம் நிதியாண்டில் புதுவை அரசின் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் 3 மாதங்கள் ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசியும், 5 மாதம் அரிசிக்கான பணம் வங்கிக்கணக்கிலும் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது இலவச அரிசி வழங்க கிலோவுக்கு ரூ.32 முதல் ரூ.36 வரை டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்த ஒரு மாதத்துக்கு ரூ.17.44 கோடி நிதி தேவை. 3 மாதத்துக்கு திட்டத்தை செயல்படுத்த ரூ.52.32 கோடி தேவை. ஆனால் அரசின் பட்ஜெட்டில் ரூ.15.58 கோடிதான் தற்போது நிதி உள்ளது. அடுத்த நிதியாண்டின் பட்ஜெட்டில் மீதி தொகையை வழங்குவதாக துறை கூறியதால் 3 மாதம் இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்த கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகள் ஒவ்வொரு மாதமும் 6 லட்சம் பயனாளிகளுக்கு 5 கிலோ தானியங்கள் வழங்க நிதியை தந்தது. பணமாக அதை கொடுக்க கூறிய நிலையில் அதற்கு பதிலாக தானியமாக வழங்கியுள்ளனர்.
அப்போது வழங்கப்பட்ட தானியங்களின் தரம் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்ததால் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்த கவர்னர் உத்தரவிட்டுள்ளார். தற்போது குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சரின் கோரிக்கையை ஏற்று சிறப்பு ஏற்பாடாக 3 மாதம் இலவச அரிசி திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்படி வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு பொதுவினியோக திட்டத்தின்கீழ் தலா 20 கிலோ அரிசி வழங்கப்படும். இந்த அரிசி தரமானதா? என்பதற்கு துறை அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும். வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு (மஞ்சள் நிற கார்டுதாரர்கள்) அரிசிக்கான பணத்தை வங்கிக்கணக்கில் சேர்க்கவும் கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த நிதியாண்டில் அவரவர் வங்கிக்கணக்கில் பணமாக செலுத்தவும் கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story