தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் வேலூர் மாநகராட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்க தனி கமிஷன் துரைமுருகன் பேச்சு
‘தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் வேலூர் மாநகராட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்க தனி கமிஷன் அமைக்கப்படும்’ என்று பொருளாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
காட்பாடி,
காட்பாடி சட்டமன்ற தொகுதி காந்திநகர் பகுதி தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் பெரியார் சிலை அருகே நேற்று இரவு நடந்தது. பகுதி செயலாளர் என்.பரமசிவம் தலைமை தாங்கினார். தி.மு.க. முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, முன்னாள் மத்திய மந்திரி எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ.க்கள் ஆர்.காந்தி, ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமதுசகி, மத்திய மாவட்ட பொருளாளர் நரசிம்மன், கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி தலைவர் டி.எம்.கதிர்ஆனந்த், பொதுக்குழு உறுப்பினர் வி.தயாநிதி, தலைமை கழக பேச்சாளர் கே.ஏ.கண்ணன் உள்பட பலர் பேசினர்.
தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் அமைச்சராக இருந்தபோது காங்கேயநல்லூரில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்ல தரைப்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினேன். அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த பட்ஜெட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரைப்பாலம் அமைக்கப்படும் என அறிவித்தார். இதுவரை அதற்கான அறிகுறியே தெரியவில்லை. வேலூர் மாநகராட்சியில் வீடுகளுக்கு இஷ்டத்துக்கு வரி போட்டுள்ளனர். கேட்டால் வரிபோட்டது போட்டது தான் என அதிகாரிகள் பதில் கூறுகின்றனர்.
வேலூர் மாநகராட்சியில் ரூ.1000 கோடியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இந்த ரூ.1000 கோடியை எப்படி செலவு செய்யலாம் என எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை அழைத்து ஆலோசனை கேட்கவில்லை. ரூ.40 கோடியை கோவையை சேர்ந்த நிறுவனத்துக்கு மின்விளக்கு வசதி செய்ய கொடுத்துள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் காவிரி குடிநீர் 24 மணிநேரமும் உங்கள் வீடுகளை தேடி வரும். தமிழகத்தில் வெகு சீக்கிரம் தி.மு.க. ஆட்சி மலரும். வேலூர் மாநகராட்சியில் தகுதி இல்லாதவர்களுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. சில மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது வேலூர் மாநகராட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்க தனி கமிஷன் அமைத்து தவறு செய்த அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக காட்பாடி பகுதி செயலாளர் வன்னியராஜா, ஒன்றிய செயலாளர்கள் சரவணன், கருணாகரன், சேஷாவெங்கட், சேண்பாக்கம் பகுதி செயலாளர் முருகபெருமாள் ஆகியோர் வரவேற்றனர். தலைமை செயற்குழு உறுப்பினர் அ.மா.ராமலிங்கம், துரைசிங்காரம், பொதுக்குழு உறுப்பினர் ஞானவேல், மாநகராட்சி முன்னாள் மண்டல குழு தலைவர் சுனில்குமார், மகளிரணி துணை அமைப்பாளர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பகுதி துணை செயலாளர் கே.எஸ்.கண்ணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story