கன்னிக்கோவிலின் பூட்டு உடைப்பு: பழமையான சிலைகளை திருட முயற்சியா? வேலூர் அருகே பரபரப்பு
வேலூர் அருகே பெருமுகை ஆட்டோநகரில் உள்ள கன்னிக்கோவிலின் பூட்டை மர்மநபர்கள் உடைத்துள்ளனர். பழமையான சிலைகளை திருட முயற்சி செய்தனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்,
வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த பெருமுகையில் ஆட்டோநகர் பாலாற்றங்கரையோரம் கன்னிக்கோவில் உள்ளது. இந்த கோவிலை பெருமுகை பகுதியில் வசிப்பவர்கள் 7 தலை முறைகளாக வழிபட்டு வருகின்றனர். பழமையான இந்த கோவிலை வழிபடும் அவர்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கோவிலை மேம்படுத்தி வருகின்றனர். இக்கோவிலில் கன்னிகள் சிலை, விநாயகர் சிலை உள்ளது.
இந்தநிலையில் நேற்று மாலை 6.30 மணி அளவில் மர்மநபர்கள் கோவில் பூட்டை செங்கல் மற்றும் கற்களால் உடைத்துள்ளனர். இந்த சத்தத்தை கேட்ட அப்பகுதியை சேர்ந்த சிலர் வழிபடுபவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக கோவிலுக்கு சென்று பார்த்தனர். ஆனால் கோவிலில் எதுவும் திருடப்படவில்லை. இவர்கள் வருகையை கண்ட மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
பின்னர் இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கோவிலில் உள்ள சிலைகளை திருட மர்மநபர்கள் முயற்சி செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
கோவில் நிர்வாகிகள் கூறுகையில், இக்கோவிலில் உண்டியல் ஏதும் கிடையாது. கோவிலுக்குள் இருக்கும் சிலைகள் அனைத்தும் பழமையான சிலைகள். எனவே அதனை திருடும் நோக்கில் மர்மநபர்கள் பூட்டை உடைத்துள்ளனரா? என்பது தெரியவில்லை. ஏனென்றால் இக்கோவில் முன்பு இருந்த குதிரை மற்றும் யானை சிலைகளை கடந்த 6 மாதம் முன்பு மர்மநபர்கள் உடைத்துள்ளனர். எனவே கோவில் சிலைகளை சேதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த செயலில் மர்மநபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்றும் நாங்கள் கருதுகிறோம். போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story