தலைமை ஆசிரியர் நியமனத்தில் கோஷ்டி மோதல் இரும்பு கம்பியால் தாக்கியதில் சி.எஸ்.ஐ. நிர்வாகிகள் 2 பேர் படுகாயம்


தலைமை ஆசிரியர் நியமனத்தில் கோஷ்டி மோதல் இரும்பு கம்பியால் தாக்கியதில் சி.எஸ்.ஐ. நிர்வாகிகள் 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 2 March 2019 4:15 AM IST (Updated: 1 March 2019 11:34 PM IST)
t-max-icont-min-icon

தலைமை ஆசிரியர் நியமனம் செய்தது தொடர்பாக கோவையில் சி.எஸ்.ஐ. நிர்வாகிகளுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இரும்புகம்பியால் தாக்கியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.இது தொடர்பாக போதகர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பிஷப் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை,

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) கோவை திருமண்டல அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் அருகிலேயே பிஷப் இல்லம் உள்ளது. கோவை திருமண்டல பிஷப்பாக திமோத்தி ரவீந்தர் உள்ளார்.

கோவை உள்பட 8 மாவட்டத்தில் உள்ள சி.எஸ்.ஐ. பள்ளிகள் இந்த திருமண்டலத்தின் கீழ்தான் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஒரு சி.எஸ்.ஐ. பள்ளியில் தலைமை ஆசிரியரை நியமித்ததில், இருதரப்பினருக்கு இடையே பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கும் உள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பாக பிஷப்பை பார்த்து பேச நேற்று முன்தினம் பிஷப் இல்லத்துக்கு இரு தரப்பை சேர்ந்த நிர்வாகிகள் வந்தனர். அவர்களை சந்தித்த பிஷப், அருகில் உள்ள சி.எஸ்.ஐ.அலுவலகத்துக்கு செல்லுங்கள், நான் வருகிறேன் என்று சொன்னதாக தெரிகிறது.

இதனால் அவர்கள் அனைவரும் அங்கு சென்று காத்திருந்தனர். அப்போது திடீரென்று அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் தகராறாக மாறியது. அப்போது அவர்களுக்குள் கை கலப்பும் ஏற்பட்டது.அங்கு கிடந்த இரும்பு கம்பியால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இந்த மோதலில் போதகர் சார்லஸ் சாம்ராஜ் (வயது 41), திருமண்டல கல்விக்குழு தலைவர் சந்திரன் (69) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் இருவரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் சார்லஸ் சாம்ராஜ், சந்திரன் ஆகியோர் தனித்தனியாக புகார் செய்தனர்.

சார்லஸ் சாம்ராஜ் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்த போதகர் கவிராஜ் ஜார்ஜ் (46), கோவையை சேர்ந்த பிரின்ஸ் ஏர்னஸ்ட், ஜான் கமலேஷ் ஆகியோர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், சட்டவிரோதமாக கூடுதல் உள்பட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் பிஷப் திமோத்தி ரவீந்தர், போதகர் சார்லஸ் சாம்ராஜ், காளிதாஸ் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சி.எஸ்.ஐ. அலுவலகத்துக்குள் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

Next Story