பர்கூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி போலீசார் விசாரணை
பர்கூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஜெகதேவியை சேர்ந்தவர் செல்வி (வயது 45). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். செல்வி கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
இதற்காக அப்பகுதியில் உள்ள இரும்பு கம்பி ஒன்றில் தோரணம் கட்டப்பட்டிருந்ததாக தெரிகிறது. அவ்வாறு கட்டப்பட்டிருந்த தோரணம் மின்சார வயரில் பட்டு கீழே விழுந்து கிடந்ததாக கூறப் படுகிறது.
இந்த நிலையில் ஜெகதேவி சுற்று வட்டார பகுதியில் நேற்று முன்தினம் லேசான மழை பெய்தது. அப்போது செல்வி அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். இதையொட்டி அவர் அறுந்து கிடந்த இரும்பி கம்பியை மிதித்துள்ளார். இதில் செல்வியை மின்சாரம் தாக்கியது. மேலும் தூக்கி வீசப்பட்ட செல்வி பலத்த காயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story