குன்னூரில் தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி தாக்குதல்
குன்னூரில் தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி தாக்குதல் அதிகரித்து உள்ளது.
குன்னூர்,
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இதில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். பொதுவாக தேயிலை செடிகளில் கொப்புள நோய் மற்றும் சிவப்பு சிலந்தி தாக்குதல் போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும்போது தேயிலை செடிகளை கொப்புள நோய் தாக்குகிறது. வறட்சி அதிகரிக்கும்போது தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி தாக்குதல் ஏற்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேயிலை செடிகளை சிவப்பு சிலந்திகள் தாக்குகின்றன. ஆனால் இந்த ஆண்டு பனி மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக பிப்ரவரி மாதத்திலேயே சிவப்பு சிலந்தி தாக்குதல் தொடங்கி விட்டது.
கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மாவட்டத்தில் உறைபனி பொழிவு இருந்தது. பிப்ரவரி மாதம் முதல் இரவில் பனிப்பொழிவும், பகலில் வெயிலும் அடித்து வருகிறது. இதனால் வறட்சியான காலநிலை நிலவுகிறது. இதன் காரணமாகவே முன்கூட்டியே தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி தாக்குதல் தொடங்கியுள்ளது. இதுகுறித்து உபாசி தேயிலை ஆராய்ச்சி மைய உதவி இயக்குனர் டாக்டர் உதயபானு கூறியதாவது:-
தோட்டத்தின் ஒரு பகுதியில் தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி தாக்குதல் தெரிந்துவிட்டால், உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் அனைத்து செடிகளுக்கும் பரவி நஷ்டத்தை ஏற்படுத்தி விடும். பொதுவாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் சிவப்பு சிலந்தி தாக்குதல் இருக்காது. ஆனால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிகமாக இருக்கும்.
இந்த ஆண்டு முன்கூட்டியே தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி தாக்குதல் ஏற்பட்டு வருகிறது. ‘புரோபர் கயிட்‘ என்ற மருந்தை செடிகளில் தெளிப்பதன் மூலம் சிவப்பு சிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்த முடியும். இதன் விலை லிட்டர் ரூ.600 ஆகும். ஏற்றுமதி தேயிலைத்தூள் தயாரிக்க பயன்படுத்தப்படும் தேயிலை செடிகளுக்கு ‘மைய்டன்‘ என்ற மருந்தை தெளிக்கலாம். இது லிட்டர் ரூ.1,600 ஆகும். இந்த மருந்துகளை 1 லிட்டர் தண்ணீரில் 1 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story