3 பேரை கட்டிப்போட்டு 35 பவுன் நகை கொள்ளை: மேலும் 3 பேர் பிடிபட்டனர்
ஈரோட்டில் 3 பேரை கட்டிப்போட்டு 35 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் பிடித்துள்ளனர்.
ஈரோடு,
ஈரோடு பழையபாளையம் இந்திராகாந்தி வீதியை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 52). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி வள்ளியம்மை. இவர்களுக்கு கவுதம் (22), ஸ்ரீராம் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் கவுதம் ஓசூரில் வேலை பார்த்து வருகிறார். ஸ்ரீராம் திண்டலில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ராமநாதனின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் 4 பேர் ராமநாதன், வள்ளியம்மை, ஸ்ரீராம் ஆகியோரை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த 35 பவுன், வெள்ளி பொருட்கள், டி.வி., 6 செல்போன்களை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். மேலும் ராமநாதனின் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த 2 கண்காணிப்பு கேமராக்களையும் அந்த மர்ம நபர்கள் உடைத்துவிட்டனர்.
இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக ஈரோடு அருகே உள்ள பெருமாள்மலையை சேர்ந்த சத்தியசீலன் (22) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற 3 பேரின் விவரங்களை தெரிவித்தார்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் மற்ற 3 பேரை போலீசார் நேற்று பிடித்தனர். விசாரணையில் அவர்கள், பட்டுக்கோட்டையை சேர்ந்த முகமது உசேன் (26), கோபி பகுதியை சேர்ந்த முகமது பாசில் (27) ஈரோடு பெருமாள் மலை பகுதியை சேர்ந்த நந்தகுமார் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகள், செல்போன்கள், வெள்ளி பொருட்கள், டி.வி. எங்கு மறைத்து வைத்துள்ளனர் என்பதும் குறித்தும் வேறு ஏதேனும் கொள்ளை சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டு உள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.