கொடைக்கானலில் 170 தங்கும் விடுதிகளுக்கு சீல், 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு
கொடைக்கானலில் தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்கும் பணியால் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
கொடைக்கானல்,
கொடைக்கானல் பகுதியில் கட்டிடங்கள் கட்டுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கடந்த 1993-ம் ஆண்டு மாஸ்டர் பிளான் என்னும் முழுமை திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி தரைத்தளம் மற்றும் முதல் தளம் சேர்த்து 7 மீட்டர் உயரத்தில் கட்டிடம் இருக்க வேண்டும் என கூறப்பட்டது. இந்த திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கவும், முறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
ஆனால் கடந்த 26 ஆண்டுகளாக இந்த திட்டம் மாற்றி அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் ஓட்டல்கள் ஆகியவை அதிகளவில் கட்டப்பட்டன. இந்த கட்டிடங்கள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிலர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவின் படி 45 தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்கள் ‘சீல்’ வைக்கப்பட்டன.
மேலும் அனுமதியின்றி கட்டப்பட்ட 1,415 கட்டிடங்களை பூட்டி ‘சீல்’ வைக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பினை மறுபரிசீலனை செய்யக்கோரி சிலர் மீண்டும் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அதன்பேரில் குடியிருப்புகள், அரசு கட்டிடங்கள், பள்ளிகள், ரெஸ்டாரண்டுகள், சிறு கடைகள் உள்பட 6 இனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. மீதமுள்ள தங்கும் விடுதிகளை பூட்டி ‘சீல்’ வைக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து நகராட்சி நிர்வாகம் கடந்த 4 நாட்களாக நகர் பகுதியில் ‘சீல்’ வைக்கும் பணியை தீவிரமாக செய்து வருகிறது. நேற்று 4-வது நாளாக 25 தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 170 தங்கும் விடுதிகள், ஓட்டல்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த விடுதிகள், ஓட்டல்களில் உள்ள சுமார் 3 ஆயிரம் தங்கும் அறைகள் பூட்டப்பட்டுள்ளன.
இதன்காரணமாக கொடைக் கானல் நகருக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்கும் அறைகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அத்துடன் இந்த தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளதால் அங்கு பணிபுரிந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேரடியாகவும், பல்லாயிரக்கணக்கானோர் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொடைக்கானல் நகரம் பொருளாதார சீர்கேட்டில் சிக்கி தவித்து வருகிறது. பொதுமக்கள், வணிகர்கள், ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் கண்ணீர் கடலில் மூழ்கி உள்ளனர். கட்டிட பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் அங்கு பணிபுரிந்து வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் வேலையில்லாமல் உள்ளனர்.
எனவே பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் நலன்கருதி ‘சீல்’ வைக்கப்பட்ட கட்டிடங்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவற்றினை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், புதிய மாஸ்டர் பிளான் திட்டத்தினை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘தற்போது சீல் வைக்கப்பட்டு வரும் கட்டிடங்கள் பல ஆண்டுகள் பழமையானவை. இந்த கட்டிடங்களை கட்டும் போதே அதிகாரிகள் தடுத்து இருந்தால் இது போன்ற நிலை ஏற்பட்டு இருக்காது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோட்டீசுகள் முறையாக வழங்காமல் ‘சீல்’ வைக்கப்பட்டு வருகின்றது. அறைகளில் தங்கி இருப்பவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர். விரைவில் சீசன் தொடங்க உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு அறைகள் கிடைக்காத நிலை ஏற்படும் என்றனர்.
இந்தநிலையில் நேற்று 100-க்கும் மேற்பட்ட பஸ்களில் வருகை தந்த கேரள மாநில சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு அறைகள் கிடைக்காமல் ஒரே நாளில் சுற்றிப்பார்த்து விட்டு திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story