பல்லடம் அருகே பரபரப்பு பெண் கொடூரமாக குத்திக்கொலை கணவர் வெறிச்செயல்
பல்லடம் அருகே பெண்ணை அவருடைய கணவர் கொடூரமாக குத்திக்கொலை செய்துவிட்டு தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்லடம்,
போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:–
பல்லடம் அருகே அருள்புரம் செந்தூரான் காலனி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகசாமி(வயது 38). இவருடைய மனைவி மீராயாஸ்மின் (32). இவர்களுக்கு கிஷோர்(12), பிரசன்னா(7) என்ற 2 மகன்கள் உள்ளனர். கணவன்–மனைவி இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலைசெய்து வந்தனர். இவர்கள் மகன்கள் 2 பேரும் தர்மபுரியில் உள்ள முருகசாமியின் தந்தை வீட்டில் தங்கி படித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் கணவன்–மனைவி இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த சில நாட்களாக அவர்கள் 2 பேரும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். நேற்று அவர்கள் 2 பேரும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளனர். இந்தநிலையில் மாலை 4.30 மணி அளவில் கணவன்–மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த முருகசாமி, திடீரென வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தால் மீராயாஸ்மினின் தலை, வயிறு என்று பல இடங்களில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த மீராயாஸ்மின் உயிருக்காக போராடி, சத்தம்போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து பார்த்தனர். அதற்குள் அவர் ரத்த வெள்ளத்தில் துடி,துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்கண்ணன்(சட்டம்–ஒழுங்கு), சரவணன்(குற்றப்பிரிவு) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில் குடும்பத்தகராறில் மனைவியை கணவனே குத்திக்கொலை செய்துவிட்டு தலைமறைவாகியது தெரிவந்தது.
மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு முருகசாமி விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர். அத்துடன் மோப்பநாய் வெற்றி வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து மீராயாஸ்மினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகசாமியை தேடிவருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.