ராமநாதபுரத்தில் சிக்கிய இலங்கை வாலிபர் கொழும்பில் 2 பேரை சுட்டுக்கொன்றவர் போலீஸ் சூப்பிரண்டு தகவல்


ராமநாதபுரத்தில் சிக்கிய இலங்கை வாலிபர் கொழும்பில் 2 பேரை சுட்டுக்கொன்றவர் போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x
தினத்தந்தி 2 March 2019 5:00 AM IST (Updated: 2 March 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் சிக்கிய இலங்கை வாலிபர் கொழும்பில் 2 பேரை சுட்டுக்கொன்றவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே தங்கப்பாபுரம் வி.ஐ.பி. நகரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் இலங்கை கொழும்புவை சேர்ந்த சங்க சிரந்த் (வயது 33), அவரிடம் டிரைவராக பணியாற்றிய கொழும்புவை சேர்ந்த முகமது சப்ரால்(23), மற்றும் இவர்களுக்கு உதவியாக இருந்த மண்டபம் சேதுநகரை சேர்ந்த ரியாஸ்(22), இவரது நண்பர் மண்டபத்தை சேர்ந்த முகமது கையூம்(22) ஆகியோரை கேணிக்கரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் சங்க சிரந்த் கொழும்பில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக சங்க சிரந்த்தின் தம்பி புத்தீகர் என்பவரை கடந்த 2012–ம் ஆண்டு எதிர்தரப்பினர் கொலை செய்தனர். இதற்கு பழிக்குப்பழியாக சங்க சிரந்த் எதிர்தரப்பை சேர்ந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தார். இதில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வந்த சங்க சிரந்த் கள்ளத்தனமாக படகில் 2018–ல் தமிழகம் வந்துள்ளார்.

கடந்த 8 மாதமாக சென்னையில் பதுங்கியிருந்த அவர் மீண்டும் கள்ளத்தனமாக படகில் கொழும்பு சென்றுள்ளார். அங்கு அவரை எதிர்தரப்பினர் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததை அறிந்து மேலும் ஒருவரை சுட்டுக்கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக இலங்கை போலீசார் தேடியபோது கள்ளத்தனமாக படகில் தப்பி கடந்த ஜனவரி மாதம் தஞ்சாவூருக்கு வந்துள்ளார். அவருடன் கார் டிரைவர் முகமது சப்ரால் என்பவரையும் அழைத்து வந்துள்ளார். 15 நாட்களுக்குபின் ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை பகுதியில் கடத்தல் தொழில் செய்யும் குமார் என்ற காளிதாஸ்(35) என்பவரை சந்தித்து ராமநாதபுரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து 20 நாட்களாக இப்பகுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. இவர்களுக்கு சமையல் செய்வதற்காக திண்டுக்கல் கோவிந்தாபுரத்தை சேர்ந்தவரும் மண்டபம் சேதுநகரில் வசிப்பவருமான ரியாஸ்(22) என்பவர் உடனிருந்தார். ரியாசை பார்ப்பதற்காக மண்டபம் வடக்கு தெருவை சேர்ந்த அவரது நண்பர் முகமது கையூம்(22) ராமநாதபுரம் வந்துள்ளார். அப்போது அவரும் போலீசில் சிக்கினார். போலீசாரின் விசாரணையில் முகமது கையூமுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பது தெரியவந்ததால் அவரை விடுவித்தனர். சங்க சிரந்த், முகமது சப்ரால், ரியாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு உதவிய குமார் என்ற காளிதாஸ் தப்பியோடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களிடம் உளவுத்துறை மற்றும் கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா கூறியதாவது:– கைது செய்யப்பட்ட வாலிபர் சங்க சிரந்த் இலங்கையில் 2 பேரை சுட்டு கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவம் இலங்கையில் நடைபெற்றதால் இங்கு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள முடியாது. சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து தங்கியதற்காக இவர்கள் மீது பாஸ்போர்ட்டு சட்டப்படியும், போலியாக ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்து இங்கு தங்கியிருந்ததால் மோசடி பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story