காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் மதுரை வாலிபர் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
சிவகங்கை காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தவர் மதுரை வாலிபர் என தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
சிவகங்கை,
சிவகங்கை–தொண்டி ரோட்டில் டாஸ்மாக் கடை அருகில் காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக சிவகங்கை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்கபூர் ஆகியோர் உத்தரவின் பேரில் சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இன்ஸ்பெக்டர்கள் அழகர், சீராளன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கபட்டது.
இந்த தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த காளிதாஸ்(வயது 35) என தெரியவந்தது. மேலும் அவர் தன்னுடைய கையில் தன் தாய், தந்தை பெயரை பச்சை குத்தியிருந்தார்.
கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த காளிதாஸ் செல்லூர் பகுதியில் ஓட்டல் ஒன்றை நடத்தி வந்தார். காளிதாசின் உறவினரான சிவகங்கையை சேர்ந்த விஜி என்பவர் இந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். சம்பவத்தன்று விஜி மற்றும் 2 பேர் சேர்ந்து ஆட்டோவில் காளிதாசை சிவகங்கை பகுதிக்கு அழைத்து வந்துள்ளனர்.
பின்னர் காளிதாசை கொலை செய்து அவரது பிணத்தை காட்டுப்பகுதியில் போட்டு விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசாரால் தேடப்படும் ஆட்டோ டிரைவர் விஜி ஏற்கனவே சிவகங்கை பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர் ஆவார்.
ஆனால் இந்த கொலைக்கான காரணம் தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.