மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப நிலை அதிகமாக இருக்கும் ஆராய்ச்சி நிலையம் தகவல்


மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப நிலை அதிகமாக இருக்கும் ஆராய்ச்சி நிலையம் தகவல்
x
தினத்தந்தி 2 March 2019 3:15 AM IST (Updated: 2 March 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப நிலை அதிகமாக இருக்கும் என ஆராய்ச்சி நிலையம் தெரிவித்து உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 4 நாட்கள் வானம் தெளிவான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. காற்று இன்று முதல் 3 நாட்களுக்கு மணிக்கு 6 கி.மீ. வேகத்திலும், 5-ந் தேதி 8 கி.மீ. வேகத்திலும் தெற்கில் இருந்து வீசும்.

வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 100.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 80, 85 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 30, 32 சதவீதமாகவும் காணப்படும். 4 நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்தவரையில், அடுத்த 4 நாட்களுக்கு வானம் தெளிவாக இருப்பதோடு, மழையற்று காணப்படும். அதிகபட்ச பகல் வெப்பம் 100.4 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பம் 75.2 டிகிரியாகவும் நிலவும். இனி கோடை காலம் ஆரம்பமாவதன் விளைவாக கோழிகளில் முட்டை உடைவது அதிகரித்தும் காணப்படும்.

கோழிகள் தீவன எடுப்பு குறையும் பட்சத்தில் முட்டை உற்பத்தியில் குறைபாடு இருக்கும். இதை தவிர்க்க, இயற்கையான வெப்ப அயற்சி நீக்க மருந்தான வைட்டமின் ‘சி’-ஐ தீவனத்தில் கலந்து கொடுத்து வர வேண்டும். அதிக எடை கொண்ட கோழிகள் வெயிலின் தாக்கத்தினால் இறக்க நேரிடும். எனவே அதை தடுக்கும் விதத்தில் தீவனத்தில் கோலின் குளோரைடு மருந்தை டன்னிற்கு 11.5 கிராம் என்ற அளவில் சேர்த்து வர வேண்டும்.

தீவிர முறையில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளுக்கும் வெப்ப தாக்குதல் பாதிப்பு ஏற்பட்டு வளர்ச்சி குறைய வாய்ப்பு உள்ளது. தீவனத்தில் எலக்ட்ரோலைட்ஸ் எனப்படும் தாது உப்புகளை சேர்க்க வேண்டும். கடந்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும்்் வெப்ப அயற்சியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

எனவே பண்ணையாளர்கள் அதற்கு தகுந்தாற்போல் கோடைகால பராமரிப்பு முறைகளை கையாள தொடங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தெளிப்பான்களை சரி செய்து தயாராக வைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story