நமது மாநில வருவாயை செலவு செய்ய நாட்டாமை எதற்கு? முதல்–அமைச்சர் நாராயணசாமி கேள்வி


நமது மாநில வருவாயை செலவு செய்ய நாட்டாமை எதற்கு? முதல்–அமைச்சர் நாராயணசாமி கேள்வி
x
தினத்தந்தி 2 March 2019 5:15 AM IST (Updated: 2 March 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

நமது மாநில வருவாயை நாம் செலவு செய்வதற்கு நாட்டாமை எதற்கு? என்று நாராயணசாமி கேள்வி விடுத்தார்.

பாகூர்,

மணவெளி தொகுதிக்கு உட்பட்ட முதியோர், விதவை உள்பட 340 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தவளக்குப்பம் சுபமங்களா மகாலில் நடந்தது. விழாவுக்கு அரசு கொறடா அனந்தராமன் தலைமை தாங்கினார். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குனர் யஸ்வந்தையா வரவேற்று பேசினார்.

பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, பாலூட்டும் தாய்மார்கள், விதவைகளுக்கு உதவித்தொகைக்கான ஆணை மற்றும் நலத்திட்ட உதவிகளை முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் வழங்கினர். அப்போது நாராயணசாமி பேசியதாவது:–

புதுச்சேரி அரசுக்கு மோடியும், கிரண்பெடியும் பல்வேறு தொல்லைகளை கொடுத்து வருகின்றனர். இருந்தாலும், மாநில அரசின் வருவாயை கொண்டு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். சிவப்பு நிற ரே‌ஷன் கார்டுகளுக்கு மட்டுமே இலவச அரிசி வழங்க வேண்டும் என கவர்னர் கூறுகிறார். ஆனால், அனைவருக்கும் அரிசி கிடைக்க வேண்டும் என்பது நமது அரசின் நிலைப்பாடு. விரைவில் சிவப்பு, மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு சமமான அளவில் அரிசி கொடுக்கும் திட்டத்தை நிறைவேற்றுவோம்.

முன்னாள் முதல்–அமைச்சர் ரங்கசாமி, மோடி, கிரண்பெடி ஆகியோர் கூட்டு சேர்ந்து கொண்டு புதுச்சேரிக்கு வளர்ச்சி வேண்டாம், முன்னேற்றம் இருக்க கூடாது. இலவச அரிசி வேண்டாம் என முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். நமது மாநில வருவாயை நாம் செலவு செய்கிறோம். இதற்கு நாட்டாமை எதற்கு?.

வணிக வரி, கலால் வரி, பெட்ரோல் டீசல் வரி, மின்சார வருவாய் மூலம் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால், மத்திய அரசு கொடுக்கும் ரூ.ஆயிரம் கோடிக்கு ஆயிரம் கேள்வி கேட்கின்றனர். மத்தியில் மாற்றம் வரும். ராகுல் காந்தி பிரதமராக வரும்போது, புதுச்சேரி மாநில மக்களுக்கு எல்லாம் கிடைக்கும். அதற்கு, நாங்கள் யாரை வேட்பாளராக நிறுத்துகிறோமோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் வட்டார காங்கிரஸ் தலைவர் ராமு, வட்டார செயல் தலைவர் சண்முகம், மணவெளி தொகுதி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story