எடப்பாடியில் நள்ளிரவில் பலத்த மழை அறுவடை செய்யப்பட்ட புகையிலை சேதம்


எடப்பாடியில் நள்ளிரவில் பலத்த மழை அறுவடை செய்யப்பட்ட புகையிலை சேதம்
x
தினத்தந்தி 2 March 2019 3:30 AM IST (Updated: 2 March 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இதனால், அறுவடை செய்யப்பட்டு வயலில் காய வைக்கப்பட்டிருந்த புகையிலை சேதம் அடைந்தது.

எடப்பாடி,

சேலம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. மதிய நேரங்களில் வெளியில் செல்வோர் வெயில் தாக்கத்தை தாங்க முடியாமல் ஆ..உஷ்...என புலம்பியபடி செல்கிறார்கள். வாகனங்களில் செல்பவர்களும் வெயிலின் உஷ்ணத்தை தாங்கியபடி செல்வதை காண முடிகிறது.

இரவு நேரங்களிலும் வெப்பத்தின் தாக்கம் இருப்பதால் பெரும்பாலான வீடுகளில் ஜன்னல் கதவை திறந்து வைத்துக்கொண்டு தூங்குகிறார்கள். குழந்தைகள் வெப்பத்தை தாங்க முடியாமல் தவிக்கிறார்கள்.

இந்தநிலையில் சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு பகுதிகளில் திடீரென மழை பெய்தது.

எடப்பாடி, செட்டிமாங்குறிச்சி, வெள்ளரிவெள்ளி, புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. சாரலுடன் தொடங்கிய மழை சிறிதுநேரத்தில் பலத்த மழையாக பெய்தது. சுமார் 1 மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது. அப்போது சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தினசரி மார்க்கெட், உழவர் சந்தை மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. விவசாய தோட்டங்களில் தண்ணீர் புகுந்தது.

எடப்பாடி பகுதியில் பெரும்பாலான தோட்டங்களில் நெல், வாழை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. இந்த வயல்களில் மழைநீர் புகுந்ததால் பயிர்கள் சேதம் அடைந்தன. இதேபோல் எடப்பாடி, வெள்ளரிவெள்ளி, செட்டிமாங்குறிச்சி பகுதிகளில் வயல்களில் பெரும்பாலான விவசாயிகள் புகையிலை பயிரிட்டு இருந்தனர். அவற்றை அறுவடை செய்து வயல்களில் காய வைத்து இருந்தனர். நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து வந்ததில் அந்த புகையிலை சேதம் அடைந்தன.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது, அறுவடை செய்யப்பட்ட புகையிலை மழைநீரில் சேதம் அடைந்ததால் அதன் காரத்தன்மை குறைந்து விடும். இதனால் அந்த புகையிலையை பயன்படுத்த முடியாது. அவை வீணாகி விடும். எனவே சேதம் அடைந்த பயிர்களுக்கு அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும், என்றனர்.

எடப்பாடி-சங்ககிரி ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டது. அந்த பள்ளத்தில் 4 மின்கம்பங்கள் உள்ளன. மழை பெய்தபோது அந்த பள்ளத்தில் தண்ணீர் நிரம்பியது. இதனால் 4 மின்கம்பங்களும் சாய்ந்தன. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது.

நேற்று மின்வாரிய ஊழியர்கள் அங்கு வந்து மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மாலையில் சீரமைப்பு பணி முடிவடைந்து மீண்டும் அந்த பகுதியில் மின்வினியோகம் தொடங்கியது.

Next Story