கியாஸ் சிலிண்டரை திறந்து ராசிபுரம் சிறையை தகர்க்க சதியா? போலீஸ் அதிகாரிகள் விசாரணை
கியாஸ் சிலிண்டரை திறந்து ராசிபுரம் சிறையை தகர்க்க சதி நடந்ததா? என போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள கிளை சிறையில் தற்போது இளம் சிறார் கைதிகள் மட்டுமே அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கு சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் வார்டன்கள் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது. இதற்கு காரணம் பணி நேரத்தில் தேவையில்லாமல் செல்போனில் பேசுவது, மது அருந்திவிட்டு பணிக்கு வருவது, புகை பிடிப்பது போன்றவற்றை கண்டித்ததால் அதிகாரி மற்றும் வார்டன்கள் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறைச்சாலையின் முக்கிய ஆவணத்தை கிழித்து சேதப்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் முதல் நிலை காவலர் தனபால் என்பவர் சேலம் மத்திய சிறைச்சாலைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் சம்பவத்தன்று சிறைச்சாலையின் சமையல்காரர் மாலையில் சமைத்து கைதிகளுக்கு சாப்பாடு போட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். அவர் சென்ற சிறிது நேரத்தில் சிறைச்சாலையின் சமையல் அறையில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதை அறிந்த சிறை அதிகாரியும், மற்ற வார்டன்களும் சமையல் அறைக்குள் சென்று பார்த்தனர். அங்கு சிலிண்டரில் பொருத்தப்பட்ட ரெகுலேட்டர் சரிவர மூடப்படாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சிலிண்டரில் இருந்து கியாஸ் வெளியேறுவதை தடுக்க ரெகுலேட்டரை உடனடியாக மூடினார்கள். தக்க நேரத்தில் விரைந்து செயல்பட்டதால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது.
மறுநாள் காலையில் பணிக்கு வந்த சமையல்காரரிடம் இது பற்றி சிறைத்துறை அதிகாரி விசாரித்தார். அவர் தான் நன்றாகத்தான் கியாஸ் அடுப்பு, ரெகுலேட்டரை மூடிவிட்டுச் சென்றதாக தெரிவித்தார். இதனால் சமையல் அறைக்குள் புகுந்து யார் கியாஸ் சிலிண்டரை திறந்துவிட்டது என சிறைத்துறை அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். சிறைச்சாலையின் ஆவணங்களை கிழித்து சேதப்படுத்திய நிலையில் கியாஸ் சிலிண்டரின் ரெகுலேட்டரை திறந்து விட்டு கியாஸ் கசிவை ஏற்படுத்தி சிறைச்சாலையை தகர்க்க சதி திட்டம் தீட்டப்பட்டதா? இதற்கு சிறைச்சாலை ஊழியர்கள் யாராவது உடந்தையா? அல்லது சமையல்காரர் மறதியின் காரணமாக கியாஸ் சிலிண்டரின் ரெகுலேட்டரை சரியாக மூடாமல் சென்றாரா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
சம்பவத்தன்று உரிய நேரத்தில் கியாஸ் சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவை கண்டுபிடித்து சரி செய்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து ராசிபுரம் சிறைச்சாலையில் இது போன்ற பரபரப்பான சம்பவங்கள் நடந்து வருவதால் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் அனைத்து அறைகளுக்கும் தனித்தனியாக பூட்டு போட்டு சாவியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் சிறைத்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story