பிளஸ்-2 தேர்வு தொடங்கியது மாவட்டம் முழுவதும் 21,080 பேர் எழுதினர்
மாவட்டம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது. 21 ஆயிரத்து 80 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
திண்டுக்கல்,
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. வருகிற 19-ந்தேதி வரை இந்த தேர்வு நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 80 மையங்களில் பிளஸ்-2 தேர்வு நடந்தது. திண்டுக்கல்லில் உள்ள அரசு, உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் தமிழ் பாடத்துக்கான தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது.
ஒரு சில பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் தேர்வு தொடங்குவதற்கு முன்பு பள்ளிகளின் வளாகத்தில் உள்ள கோவில்கள் முன்பு அமர்ந்து வழிபாடு நடத்தினர். அந்த கோவில்களில் தேர்வையொட்டி சிறப்பு பூஜைகளும் நடந்தது. தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற மாணவர்களை ஆசிரியர்கள் வாழ்த்தினர்.
மாவட்டம் முழுவதும் பிளஸ்-2 தேர்வுக்காக மொத்தம் 22 ஆயிரத்து 780 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் மாணவர்கள் 10 ஆயிரத்து 909 பேர். மாணவிகள் 11 ஆயிரத்து 871 பேர். இந்த நிலையில் நேற்று நடந்த தேர்வில் மொத்தம் 21 ஆயிரத்து 80 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். 1,700 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதவில்லை.
தேர்வின் போது, மாணவ- மாணவிகள் காப்பியடிப்பதை தடுக்க மாவட்ட வருவாய் அலுவலர், சப்-கலெக்டர், ஆர்.டி.ஓ. ஆகியோர் தலைமையிலான 161 பறக்கும் படைகள் மாவட்டம் முழுவதும் உள்ள மையங்களில் ஆய்வு செய்தனர். முன்னதாக தேர்வு எழுத சென்ற மாணவ-மாணவிகள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்டவற்றை தேர்வு அறைக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதிக்கொண்டிருந்தனர். அப்போது மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் மற்றும் அதிகாரிகள் அந்த பள்ளிக்கு வந்தனர். பின்னர் கலெக்டர் ஒவ்வொரு தேர்வு அறைக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் மாணவிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா? என்று பள்ளி நிர்வாகத்தினரிடம் கேட்டறிந்தார்.
Related Tags :
Next Story